சென்னை:துபாயில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, புலனாய்வுத் துறை அதிகாரிகள், நேற்று அதிகாலை (டிச.09) சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக துபாய், சார்ஜா, குவைத், அபுதாபி போன்ற நாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகளை தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது துபாயிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளை, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அதில் சென்னையைச் சேர்ந்த 2 பெண் பயணிகள் உள்பட 3 பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவர்கள் 3 பேரையும் நிறுத்தி விசாரித்துள்ளனர்.
அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். அதோடு இவர்கள் மூன்று பேரும் சுற்றுலாப் பயணிகள் விசாவில் நேற்று முன்தினம் இரவு துபாய் சென்று விட்டு உடனடியாக சென்னை திரும்பியுள்ளனர். இது அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து அவர்கள் மூன்று பேரையும், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று, அவர்களின் உடைமைகள் மற்றும் பைகளை முழுமையாக, பெண் சுங்க அதிகாரிகள் உதவியுடன் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது 2 பெண் பயணிகள் உள்பட 3 பேரின் உள்ளாடைகள் மற்றும் அவர்களின் கைப்பைக்குள் இருந்த ரகசிய அறைகள், ஆகியவற்றுக்குள் மறைத்து வைத்திருந்த 7.5 கிலோ தங்க கட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.4.5 கோடியாகும். இதனையடுத்து இரண்டு பெண் பயணிகள் உட்பட மூன்று பேரையும் கைது செய்த அதிகாரிகள், சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இவர்கள் மூன்று பேரும், கடத்தல் குருவிகள்தான் என்று தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இவர்களை கடத்தலில் ஈடுபடுத்திய சர்வதேச கடத்தல் கும்பலின் முக்கிய ஆசாமி யார், இவர்கள் இதை போல் ஏற்கனவே தங்கம் கடத்தலில் ஈடுபட்டுள்ளனரா என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:பெங்களூரு மெட்ரோ ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; ஒருவர் கைது..!