சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ரசூல் என்கிற கனி (56). இவர் மண்ணடி பகுதியில் அப்துல் சலாம் என்பவரின் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் (கடத்தல் தங்கம் வெளிநாட்டு பொருட்கள் வியாபாரம்) கடந்த மூன்று ஆண்டுகளாக குருவியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிறுவனத்தில், அப்துல் சலாம் தவிர, மேலும் 3 நபர்கள் உரிமையாளர்களாக உள்ளனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி திருச்சியில் இருந்து சென்னைக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகளுடன் தினேஷ் என்ற ஓட்டுநருடன் ரசூல் காரில் சென்றுள்ளார்.
மதுராந்தகம் அருகே ஒரு கும்பல் தங்களை வழிமறித்து தங்கத்தை பறித்துச்சென்றதாக தனது முதலாளிகளில் ஒருவரான அப்துல் குத்தூஸ் என்பவருக்கு ரசூல் தகவல் தெரிவித்துள்ளார். சந்தேகம் அடைந்த அப்துல் குத்தூஸ் தனது நண்பர் சாதிக்குடன் மதுராந்தகம் சென்று காவல் துறையிடம் கடத்தல் தொடர்பாக புகார் அளிக்காமல், இவர்களே விசாரணை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து ரசூலை மாமல்லபுரம் அழைத்துச்சென்று ஒரு விடுதியில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். அப்போது ரசூல் பணத்திற்கு ஆசைப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சமீர் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து திட்டம் போட்டு நகையை திருடியதாக ஒத்துக்கொண்டுள்ளார். இதையடுத்து அப்துல் குத்தூஸும், சாதிக்கும், ரசூலை மீண்டும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அடி தாங்காமல் மயங்கிய ரசூலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதனையடுத்து தங்களிடம் பணியாற்றி வரும் ரசூல் மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டம் போட்டு ஒரு கிலோ தங்கத்தை திருடிவிட்டதாக கடந்த 1ஆம் தேதி மதுராந்தகம் காவல் நிலையத்தில் அப்துல் குத்தூஸ் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சமீர், பொன்மணி சங்கர் ஆகிய இருவரை மதுராந்தகம் காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ தங்கம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து கடந்த 4ஆம் தேதி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் கோமா நிலையில் சேர்த்த ரசூலை, ஒரு ஆள் போட்டு அப்துல் குத்தூஸ் மற்றும் அவரது பங்குதாரர்கள் கண்காணித்து வந்துள்ளனர். ரசூலின் மருத்துவச்செலவுக்கு 6 லட்சம் ரூபாய் மருத்துவமனைக்கு பணம் செலுத்தியுள்ளனர், ஐசியு வார்டிலிருந்து சில தினங்களுக்கு முன்பு ரசூல் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதையடுத்து அதிக பணம் செலவிடமுடியாமல் ரசூலை பார்த்துகொள்ள நியமிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவமனையில் இருந்து வெளியேறுமாறு தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்குச் செலுத்த வேண்டிய ஒன்றரை லட்சம் ரூபாய் பாக்கியும் செலுத்தவில்லை. இந்த நிலையில் குருவி வேலைக்குச்சென்ற தனது கணவர் 20 நாட்களுக்கு மேலாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த ரசூலின் மனைவி ஜவகர் நிஷா, இது தொடர்பாக ரசூலின் முதலாளிகள் அப்துல் சலாம், அப்துல் குத்தூஸ், அப்துல் ரகுமான், அப்துல் வதூத் ஆகியோரிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
ஆனால், அவர்கள் தங்க வியாபாரம் தொடர்பாக தங்களுடன் தான் ரசூல் இருக்கிறார் என்றும்; கவலைப்பட வேண்டாம் எனவும் கூறியுள்ளனர். தனது கணவர் ரசூலை பேசச் சொல்லுங்கள் என ஜவகர் நிஷா கேட்டபோது, வியாபாரத்துக்காக வைத்திருந்த நகைகள் திருட்டு போனது தொடர்பாக சிலரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சாக்கு போக்கு சொல்லி மழுப்பலாகப் பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த நிஷா, தீவிரமாக விசாரித்த போது கணவரை கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம் எனத் தெரிவித்து விட்டு இணைப்பைத் துண்டித்துள்ளனர்.
ரசூலின் மனைவி ஜவகர் நிஷா, தனது கணவரின் முதலாளி அப்துல் சலாமை மீண்டும் தொடர்புகொண்டு நடந்தது நடந்தாக இருக்கட்டும்; எப்படியாவது எனது கணவரை காப்பாற்றுங்கள் என கெஞ்சியுள்ளார். ஆனால், அப்துல் சலாம் உள்ளிட்ட நான்கு பேரும் 'ஏற்கனவே ஆறு லட்ச ரூபாய் வரை மருத்துவ செலவு செய்துள்ளோம். நீதான் எங்களுக்குப் பணம் தர வேண்டும்’ எனக்கூறியதுடன், ’இனி போன் செய்து எங்களை தொந்தரவு செய்யக்கூடாது’ எனவும் மிரட்டியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் ஜவகர்நிஷா புகார் அளித்தார். அதன் பேரில் வடக்கு கடற்கரை போலீசார் விசாரணை நடத்தி, கடத்தல் தங்கம், வியாபாரம் செய்வதாக கூறப்படும் ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த அப்துல் குத்தூஸ் (40), கொய்யா தோப்பு அப்துல் சலாம் (40), மண்ணடியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (36), ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த அப்துல் வதூத் (40) ஆகிய நான்கு பேரைப் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களிடம் நம்பிக்கையான முறையில் பணியாற்றி வந்த ரசூல், திடீரென தங்க கட்டிகளுக்கு ஆசைப்பட்டு தங்களை நம்பிக்கைத் துரோகம் செய்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் தங்கம் குறித்து போலீஸிடம் தெரிவிக்க முடியாமல், அவரை கடத்திச் சென்று தாக்கி விசாரணை நடத்தியதாகவும், அதில் அவர் மயக்க நிலைக்குச் சென்றதால் பயத்தில் மதுராந்தகம் காவல் நிலையத்தில் பொய்ப் புகார் அளித்துவிட்டு, அவரை தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பிடிபட்ட நான்கு பேர் மீதும் ஆள் கடத்தல், கடுமையாக தாக்குதல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்த வடக்கு கடற்கரை காவல் துறையினர் அவரிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு காரையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ரசூலை தாக்கியது தொடர்பாக தலைமறைவாக உள்ள சாதிக் உள்ளிட்ட சிலரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஏஎஸ்பி பல்லை பிடுங்கினாரா? இல்லையா? - நெல்லை விவகாரத்தில் நீடிக்கும் குழப்பம் - முழுவிவரம்!