சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருட்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது தாய்லாந்திலிருந்து வந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த அஸ்ரப் அலி (52), அவரது மனைவி சாயிரா பானு (50), மகன் முகமது சாலி (23) ஆகியோர் வந்தனர்.
சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் அலுவலர்கள் நடத்திய விசாரணையில், உள்ளாடைக்குள் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து கடத்திவந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடமிருந்து ரூ. 97 லட்சம் மதிப்புள்ள 2.5 கிலோ தங்கத்தை கைப்பற்றினார்கள். அதே விமானத்தில் தாய்லாந்திலிருந்து வந்த கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சலீம் (40) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, காலில் அணியும் சாக்சில் மறைத்து வைத்திருந்த ரூ. 39 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கக் கட்டிகளை அலுவலர்கள் கைப்பற்றினார்கள். அதேபோல், அபுதாபியிலிருந்து வந்த விமானத்தில் வந்த கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சையத் லாபி குன்னதோடி (50) என்பவரது உடமைகளை சோதனை செய்தபோது மோட்டார் ஒன்று இருந்தது.
அதை கழற்றி பார்த்தபோது அதில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அதில் ரூ. 64 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 640 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினார்கள்.
மேலும், சலீம் கொண்டுவந்த ஒரு கிலோ தங்கத்தை வாங்கவந்த சென்னையைச் சேர்ந்த இளைஞரையும் அலுவலர்கள் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அஸ்ரப் அலி, அவரது மனைவி சாயிரா பானு, கேரளாவைச் சேர்ந்த சையத் லாபி குன்னதோடி மற்றும் சலீம், இவரிடம் நகையை வாங்க வந்த இளைஞர் ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ள அலுவலர்கள், இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கடத்தி வரப்பட்ட 290 கிராம் தங்கம் - சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!