தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Gold Rate: விண்ணைத் தொடும் தங்கம் விலை! முதலீடுக்கு சரியான நேரமா? - இஸ்ரேல் ஹமாஸ் போர் எதிரொலி

Today Gold Rate: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரொலியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 வரை உயர்ந்து மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் எதிரொலி; விண்ணைத் தொட்ட தங்கத்தின் விலை
இஸ்ரேல் - ஹமாஸ் போர் எதிரொலி; விண்ணைத் தொட்ட தங்கத்தின் விலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 5:31 PM IST

சென்னை:சென்னையில் இன்று (அக்.14) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ரூ.5 ஆயிரத்து 555-க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.44 ஆயிரத்து 440-க்கும் விற்பனை ஆகி வருகிறது. இந்த திடீர் விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதர சூழலை பொறுத்தும், கமாடிட்டி மார்க்கெட்டை பொறுத்தும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி சர்வேதச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்காவின் வங்கிகளின் வட்டி விகிதம் என பல்வேறு காரணங்களை முன் வைத்து தான், தங்கத்தின் விலையில் தினமும் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே உருவாகி உள்ள போரின் எதிரொலியாக கடந்த 8 நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. கடந்த அக்டோபர் 6ஆம் தேதியன்று தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.42 ஆயிரத்து 280-ஆக இருந்தது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 7ஆம் தேதி மதியம் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தாக்குதல் தொடங்கியது.

அன்றைய தினம் தொடர்ந்தே தங்கத்தின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயில் முதலீடு அதிகமாக இருப்பதால், தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில், ஓரேநாளில் தங்கத்தின் விலையானது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

மேலும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே உருவாகி உள்ள போரின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 64 டாலர்கள் அதிகரித்ததே, உள்நாட்டிலும் விலை உயரக் காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த திடீர் விலை ஏற்றம் குறித்து மெட்ராஸ் தங்க, வைர நகை வியாபரிகள் சங்கத்தின் நிர்வாகி கோல்ட் குரு கூறுகையில், "தங்கம் விலை என்பது எப்போதும் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச வங்கிகளின் நிலைபாடு, முதலீட்டுளார்களின் முதலீடுகள், சர்வதேச அரசியல் சூழ்நிலை, உலகளாவிய சம்பவங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படுகிறது.

தங்கம் விலை என்பது தினமும் ஏற்றம், இறக்கம் கொண்டுதான் இருக்கும். இந்த விலை ஏற்றம் என்பது எதிர்பார்த்த ஒன்று தான். மேலும், தங்கத்தின் விலையில் எப்போதும் உலக நாடுகளின் சூழ்நிலைகள் அமைந்து இருக்கும். தற்போது, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரொலியாக தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

மேலும் இன்று காலையில், தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.360 வரை உயர்ந்துள்ளது. எனவே, இந்த போர் நீடித்தால் தினமும் தங்கத்தின் விலையில் தாக்கம் இருக்கும்" என தெரிவித்தார். இது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், "கடந்த ஏப்ரல், மே மாதத்தில் அமெரிக்க வங்கிகள் தொடர்ந்து திவால் ஆகி வந்தன.

டாலரில் முதலீடு செய்பவர்கள் குறைந்து, அனைவரும் தங்கத்தின் பக்கம் திரும்பினர். தற்போது, அமெரிக்கப் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து மீளத் தொடங்கியுள்ள நிலையில், அந்நாட்டு டாலரின் மதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

எனவே சர்வதேச பங்குச் சந்தையில் தங்கத்துக்கு பதில் டாலரில் முதலீடு செய்து வந்த நிலையில், தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் போரின் காரணமாக, தங்கத்தின் முதலீடு பாதுகாப்பானது என்று கருதி உலக முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கமும், கச்சா எண்ணெயின் பக்கமும் திரும்பி உள்ளனர்.

கடந்த செப்-30 ஆம் தேதி அன்று சர்வதேச சந்தையில், தங்கம் அவுன்சுக்கு $,1,848.82 இருந்தது. இந்நிலையில், மீண்டும் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 54 டாலர்கள் அதிகரித்து, தற்போது $1,932 ஆக இருப்பதால், உள்நாட்டிலும் தங்கம் விலையானது உயர்ந்தது.

தங்கம் விலை என்பது பொதுவாக தேவை மற்றும் அளிப்பு (Demand and Supply) வைத்தே நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சென்ற மூன்று வாரங்களில் டாலரின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால், தங்கத்தின் தேவை இல்லாமல் போனது. இதனால் தங்கத்தின் விலை ஆனது குறைந்தது. தற்போது, தங்கத்தின் முதலீடு பாதுகாப்பானது என்று கருதி, தங்கத்தின் பக்கம் திரும்பும் நிலையில், தங்கத்தின் தேவையானது அதிகரித்து உள்ளது. பொருளாதார விதியின் படி, தேவை இருக்கும் போது விலையும் அதிகரிக்கும்”.

இன்றைய நிலவரம்: அக்டோபர் 14:

1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,555

1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.44,440

1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ 6,025

8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ48,200

1 கிராம் வெள்ளி - ரூ.77.00

1 கிலோ வெள்ளி - ரூ.77,000

இதையும் படிங்க:சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்வு.. காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details