நேற்று கிராம் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 122 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 4 ஆயிரத்து 231 ரூபாயாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 33 ஆயிரத்து 848 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் நேற்றைய விலையைவிட இன்று 872 ரூபாய் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய இந்திய தங்க நகை வியாபாரிகள் சங்க மாநில செயலாளர் சாந்தகுமார், “கடந்த சில நாட்களாக சீராக இருந்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவருகிறது. இந்திய ரூபாய்க்கு நிகராக 70 ரூபாயாக இருந்த அமெரிக்க டாலர் தற்போது 73.85 ரூபாயாக உள்ளது. இதுவும் தங்க விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை ஆகியவை சரிந்து வரும் நிலையில் தங்கத்தின் மதிப்பு மட்டுமே உயர்ந்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளனர். இதனால் தான் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.