சென்னை:சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. பொதுவாக ஆடி மாதம் என்பதால் எந்த ஒரு விஷேச நிகழ்வுகளும் இருக்காது. அதனால், தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்படும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு ஆடி மாதம் தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது. இந்த விலை ஏற்றம் தங்கம் வாங்குபவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
மேலும், கடந்த ஜூலை 21ஆம் தேதி தங்கம் விலை திடீரென சரிவைச் சந்தித்தது. ஒரேநாளில் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது. அதேபோல், ஜூலை 22ஆம் தேதி 120 ரூபாய் குறைந்தது. இந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்தது. பின்னர், ஜூலை 23ஆம் தேதி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 44,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.