திண்டிவனத்தைச் சேர்ந்த லாவண்யா(22) என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக முல்லை தெரு, காந்தி ரோடு, மேற்கு தாம்பரம் என்ற முகவரியிலுள்ள வீட்டில் ஆயுர்வேத மசாஜ் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 24ஆம் தேதி அன்று மாலை சுமார் 5 மணியளவில் 4 நபர்கள் மசாஜ் சென்டருக்குள் நுழைந்து காவல் துறையினர் எனக் கூறி லாவண்யாவிடமிருந்து 7 கிராம் எடை கொண்ட தங்கச்சங்கிலி, இரண்டு செல்ஃபோன்களை பறித்துச்சென்றனர்.
இதுகுறித்து, லாவண்யா தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது திருவேற்காடு பகுதியை சேர்ந்த சரவணகுமார்(26), சந்துரு(22),ஜெய்சதீஷ்(22) வேல்முருகன்(20) எனத் தெரியவந்தது.
இதையடுத்து, இவர்கள் நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 7 கிராம் தங்கச்சங்கிலி, இரண்டு செல்ஃபோன்கள், ஒரு கத்தி பறிமுதல் செய்தனர்.