சென்னை: சென்னையில் 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,645-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,160-க்கும் விற்பனையாகி வருகிறது. இதேபோல் வெள்ளி கிராமுக்கு ரூ.80 காசுகளும், கிலோவிற்கு ரூ.800 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனையாகிறது.
இந்த வாரத்தில் தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி சர்வதேச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்காவின் வங்கிகளின் வட்டி விகிதம் என்று பல்வேறு காரணங்களை முன் வைத்துதான் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரொலியாக கடந்த ஒரு மாத காலமாக தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம் இறக்கம் காணப்பட்டது. இத்தகைய சூழலில் கடந்த திங்கள்கிழமை (நவ.6) அன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது. செவ்வாய்கிழமை (நவ.7) அன்று சவரனுக்கு ரூ.240 குறைந்தது. புதன்கிழமை (நவ.8) சவரனுக்கு ரூ.80 குறைந்தது. வியாழக்கிழமை (நவ.9) அன்று தங்கம் சவரனுக்கு ரூ.360 குறைந்தது. இப்படியாக கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.800 குறைந்தது.