சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்றைய முன்தினம் (நவ.26) வெளிநாட்டில் இருந்து சந்தேகிக்கும் வகையில் வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின்போது, அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த நபரை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில், அந்த நபர் கணக்கில் காட்டப்படாத ஆறு கிலோ தங்கக் கட்டிகளை வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்ரப் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் சென்னை மண்ணடியில் வசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், சென்னை மண்ணடியில் உள்ள அஷ்ரப் வீட்டிற்கு நேற்று (நவ.27) சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அஷ்ரப் வீட்டில் வைத்திருந்த கணக்கில் வராத ஒன்றரை கிலோ தங்கக் கட்டி மற்றும் 45 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக அஷ்ரப்பிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:“நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல” - சென்னிமலை முருகன் கோயில் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கறிஞர் சரவணன் கருத்து!