சென்னை: நாமக்கல் மாவட்டத்தில், கோகுல்ராஜ் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்து, அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து, சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி யுவராஜ், உள்ளிட்ட 10 பேரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதேபோல, வழக்கில் சங்கர் உள்ளிட்ட ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் விசாரணையில் உள்ளது. வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியம் அளித்ததால், அவரை வரவழைத்து விசாரித்த நீதிபதிகள், அவர் மீது தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்குகளை விசாரித்த இரு நீதிபதிகளும், வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றினர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, கோகுல் ராஜின் தாயார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோகுல் ராஜை யுவராஜ் மற்றும் அவரது ஆட்கள் அழைத்துச்சென்று கொலை செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக வாதிட்டார்.