தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இந்தியாவில் காலநிலை அவசரநிலையை பிரகடனம் செய்க" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்! - chennai, global warming Precautions, PMK Ramadas, climate-change

சென்னை : புவிவெப்பமயமாதலின் தாக்கத்தினால், மனிதகுலத்திற்கு ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்த முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

precautions-ramadas

By

Published : Sep 6, 2019, 7:54 PM IST

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புவிவெப்பமயமாதல் என்ற பேரழிவை தடுப்பதற்கான செயல்திட்டங்களை வகுத்து அதனை அறிவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு காலநிலை மாநாடு வரும் 23ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது.

அம்மாநாட்டுக்கு ஆயத்தமாவதற்காக கனடா, பிரேசில், தாய்லாந்து ஆகிய நாடுகளில் மண்டல மாநாடுகள் நடத்தப்படும் என்று ஐ.நா. அமைப்பு அறிவித்திருந்தது. இந்த நிலையில், ஆசிய - பசுபிக் மண்டலத்திற்கான மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் கடந்த 2ஆம் தேதி தொடங்கி நிறைவடைந்தது.

அதில், புவிவெப்பமயமாதலுக்கு ஆசிய - பசுபிக் நாடுகள் இதுவரை முதன்மைக் காரணமில்லை என்றாலும், இனி வரும் காலங்களில் இந்த நாடுகளில் இருந்து தான் அதிக அளவில் மாசுக்காற்று வெளியாகும். அதுமட்டுமின்றி, புவிவெப்பமயமாதலால் இந்நாடுகள் தான் மிகக்கடுமையான பேரழிவுகளைச் சந்திக்கும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டிய இந்தியாவும் இந்த மண்டலத்தில் தான் உள்ளது என்பதால் இம்மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.

புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 6 தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன. அரசு பிரதிநிதிகள், அதிகாரிகள், பன்னாட்டு அமைப்புகள், வங்கிகள், அரசு சாரா அமைப்புகள் சார்பிலான பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் தமிழ்நாட்டிற்கு நான் உருவாக்கிய பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் அருள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில், புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா போன்ற நாடுகள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியே விரிவாகவும், அழுத்தமாகவும் விவாதிக்கப்பட்டன. மாநாட்டில் பேசிய ஐ.நா காலநிலை பிரிவு துணைச் செயலரும், இந்தியருமான ஓவைஸ் சர்மத் 'பாரிஸ் காலநிலை உடன்பாட்டின் இலக்குகளை முழுமையாக நிறைவேற்றினால் கூட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகும்.

இதனால் பயன் கிடைக்காது. மாறாக, உலக நாடுகள் அனைத்தும் இணைந்து வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கான திட்டங்களை வரும் 23ஆம் தேதி ஐநா மாநாட்டில் வெளியிட வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

இதற்கான நடவடிக்கைகளை தங்களின் அமைப்புகள் சமரசமின்றி மேற்கொள்ளும் என தாய்லாந்து சுற்றுச்சூழல் அமைச்சர் வராவுட் சில்பா ஆர்ச்சா (Varawut Silpa-archa), ஆசிய-பசிபிக் மண்டலத்திற்கான ஐ.நா. சமூக, பொருளாதார ஆணைய செயலர் அர்மிடா அலிஸ்ஜபானா (Ms. Armida Alisjahbana) ஆகியோர் உறுதியளித்தனர்.

எனவே, உலகைக் காப்பாற்றுவதற்கான இலக்குகளை எட்ட இந்தியா இப்போது பயணிக்கும் வேகம் போதாது. இந்த வேகத்தை விரைவுபடுத்துவதற்காகத் தான் இந்தியாவில் காலநிலை அவசரநிலையை பிரகடனம் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற காலநிலை நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்கான ஆசிய - பசுபிக் மாநாட்டில் புதிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா விழித்துக் கொண்டு போர்க்கால வேகத்தில் கரியமில வாயு வெளியாகும் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.

அதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கி அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் காலநிலை அவசர நிலையை அரசுகள் உடனடியாக பிரகடனம் செய்ய வேண்டும்' என அறிக்கை வெளியிட்டார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details