தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலைஞர் மு. கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி - குடியரசுத் தலைவர்

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவையொட்டி, கலைஞர் மு. கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் உரையாற்றினார்.

மு.கருணாநிதி
மு.கருணாநிதி

By

Published : Aug 2, 2021, 8:34 PM IST

Updated : Aug 2, 2021, 8:43 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவையொட்டி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழா இன்று (ஆக.2) நடைபெற்றது. இதற்கான அழைப்பின் பேரில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று டெல்லியிலிருந்து, விமானம் மூலமாக சென்னை வந்தடைந்தார். அவரது வருகையையொட்டி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் 7 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.

காலம் கண் போன்றது;கடமை பொன் போன்றது

பின்னர் காலம் கண் போன்றது, கடமை பொன் போன்றது என்ற வாசகம் பொறிக்கப்பட்ட, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை, குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்.

விழாவுக்கு வந்திருந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரை, சபாநாயகர் அப்பாவு வரவேற்று பேசினார்.

தேசியக்கொடியேற்றும் உரிமையை முதலமைச்சர்களுக்கு பெற்றுக்கொடுத்தவர்

அப்போது, அரை நூற்றாண்டு காலம் அரசியலில் கோலோச்சிய மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெருமைகளை, சபாநாயகர் அப்பாவு எடுத்துக் கூறினார். தொடர்ந்து சென்னை கோட்டையில் முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்றுக்கொடுத்தவர் கருணாநிதி எனவும் நினைவு கூர்ந்தார்.

விழாவில் உரையாற்றிய சபாநாயகர் அப்பாவு

கலைஞர் மகனாக நெகிழ்ச்சி

வரவேற்புரைக்குப் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “கலைஞர் படத்தை குடியரசுத் தலைவர் திறந்ததை நினைத்து, முதலமைச்சராக மகிழ்கிறேன்; கலைஞர் மகனாக நெகிழ்கிறேன்.

இதனால் இந்த நாள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாளாக விளங்குகிறது. பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடியவர், ஐ.ஏ.எஸ் பதவி கிடைத்தும் அதனை ஏற்காமல் சமூக நீதியை தனது வாழ்க்கையாக கொண்ட குடியரசுத் தலைவர், கலைஞர் திருவுருவப்படத்தை திறக்க வந்தது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்த சட்டப்பேரவை பல புதிய திட்டங்களை உருவாக்கி, சமத்துவம், சமூகநீதி ஆகியவை அடங்கிய சமுதாயத்தை உருவாக்கி உள்ளது.

தமிழர்கள் முன்னேற்றத்திற்கு ஒளி ஏற்றியவர்

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவது, காவிரி நடுவர் ஆணையம் குறித்த தீர்மானம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், மாணவர்களை பாதிக்கக்கூடிய நுழைவுத் தேர்வு செல்லாது என பல புரட்சிகர தீர்மானங்களை இயற்றி, தமிழர்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஒளி ஏற்றியவர் கருணாநிதி.

சமூகநீதிக்கு அடித்தளம் அமைத்து, தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, அனைத்து தரப்பு மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டியவர் கருணாநிதி.

நீண்ட நெடிய பழமையான பாரம்பரியமும், ஜனநாயக மாண்பும் கொண்ட இந்த சட்டப் பேரவை, இன்னும் பல நூற்றாண்டுகள் பணியாற்றி அடித்தட்டு மக்கள் வாழ்வை உயர்த்த வேண்டும்” என்றார்.

கருணாநிதியின் சிந்தனைகளே காரணம்...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கருணாநிதி ஆட்சியில் இயற்றப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சட்டங்களை நினைவு கூர்ந்த முதலமைச்சர் ஸ்டாலினின் உரைக்குப் பின்னர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை தொடங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதன்மையான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களை இயற்ற, மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பேரார்வமும், தொலைநோக்குச் சிந்தனையுமே அடிப்படைக் காரணங்களாய் அமைந்தன.

இந்த சட்டங்கள் அனைத்தும், தமிழ்நாட்டை வளமான மாநிலமாக உருவாக்க வழிகோலின.
எழுதப்பட்ட அரசமைப்பைக் கொண்ட மக்களாட்சி மலரும் நாடுகளில், இந்தியா உலகிலேயே மிகப்பெரிய நாடாகும்.

விழாவில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

பெருந்தலைவைர்களைக் கண்ட சட்டப்பேரவை

சட்டமியற்றுதல் என்பது, பல்வேறு சட்டங்களால் செம்மைப்படுத்தப்படும் நிதானமான, திடமாகப் பரிணமிக்கும் செயலாகும். முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமியற்றுதல் குழுவானது, தொடக்கத்தில் மதராசு சட்டப்பேரவை மேலவை என்ற பெயரில், 1921ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

அந்த வகையில், 2021ஆம் ஆண்டு சட்டமியற்றுதல் குழுவானது, தமிழ்நாட்டில் நலிவடைந்த பிரிவினர், பெண்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டது.

தமிழ்நாடு சட்டப் பேரவையானது பனகல் ராஜா, சி. ராஜகோபாலச்சாரி, டி பிரகாசம், கே. காமராஜ், எம். பக்தவத்சலம், டாக்டர் சி.என். அண்ணாதுரை, டாக்டர் மு. கருணாநிதி, டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன், செல்வி டாக்டர் ஜெ. ஜெயலலிதா போன்ற பல பெருந்தலைவர்களைக் கண்டுள்ளது.

வரலாற்று சிறப்பு வாய்ந்த சட்டங்களை இயற்றக் காரணமான மு.கருணாநிதியின் சிந்தனை குறித்த ஆளுநர் உரைக்குப் பின்னர், தலைமை விருந்தினராக கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

தமிழில் பேசிய குடியரசுத் தலைவர்

விழாவில் உரையாற்றிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்
அப்போது இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலைஞர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில் இது ஒரு முக்கியத்துவம் மிக்க நாள் என தமிழில் உரையாற்றினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “மெட்ராஸ் சட்டமன்ற கவுன்சில் என பெயரிடப்பட்டிருந்த அவையின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆகஸ்ட் மாதம் என்பது, நமது தேசிய நாட்காட்டியில் சிறந்ததொரு மாதம் ஆகும். ஏனெனில், இது நமது சுதந்திர தினத்தின் ஆண்டு நிறைவையும் குறிக்கிறது.

விடுதலைக்குப் பிறகான ஆண்டுகளில், தேசம் பல துறைகளில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. மக்களும், தலைவர்களும் இணைந்து மேற்கொண்ட பணிகளினால் இது சாத்தியமானது.


ஆலோசனை அமைப்பு - சட்டப்பேரவை

மெட்ராஸ் சட்டமன்ற கவுன்சிலின் வரலாறு, 1861ஆம் ஆண்டு காலத்தையது என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த காலத்தில் ஆலோசனை அமைப்பாக உருவாக்கப்பட்ட இந்த அமைப்புதான், 1921ஆம் ஆண்டில், சட்டத்தை இயற்றும் சட்டப்பேரவையாக உருவாக்கப்பட்டது.

காலனித்துவ ஆட்சியின் கீழ், அத்தகைய அமைப்பு செயல்படுவதற்கு பல வரையறைகளும், சவால்களும் நிச்சயம் இருந்தன. சாதி, சமூகம், பிற அம்சங்களின் அடிப்படையில் ஏராளமான தனித்தனி தொகுதிகள் இருந்தன.

ஓரளவேயாக இருந்த போதிலும், அது ஒரு பொறுப்பான அரசாங்கத்தை நோக்கிய நகர்வாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த ஜனநாயகம், அதன் நவீன வடிவத்தில், மீண்டும் திரும்பியது.

மேற்கோள் காட்டப்பட்ட பாரதி வரிகள்

தமிழ்நாட்டு மக்களின் முற்போக்குச் சிந்தனையை எடுத்துக்காட்டுகின்ற வகையில், மிகச்சிறந்த தமிழ்க்கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் ஒரு சில வரிகளை, இங்கே நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்

மந்திரம் கற்போம் வினைத்தந்திரம் கற்போம்
வானை யளப்போம், கடல் மீனை யளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்தித்தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம்

இதை இவ்வாறு விளக்கலாம்.


வேதம், அறிவியல் இரண்டையும் கற்றுக்கொள்வோம்
நாம் வானத்தையும், பெருங்கடல்களையும் ஆராய்வோம்
நிலவின் இயல்புகள் என்னவென்று நாம் தெரிந்து கொள்வோம்
நமது தெருக்களைத் தூய்மையாக்குவது குறித்தும் அறிந்து கொள்வோம்” என கூறி உரையை முடித்தார்.

விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு சட்டப்பேரவையில் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்த குடியரசுத்தலைவர்

Last Updated : Aug 2, 2021, 8:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details