சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்திற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் (டிச.28) காலை காலமானார். அதனைத்தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
அங்கு ஆயிரக்கணக்கான பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த குவிந்த நிலையில், பொது அஞ்சலிக்காக நேற்று காலை 6 மணி அளவில் விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்திலிருந்து சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு அமைச்சர்கள், திரைப் பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: மெரினாவில் விஜயகாந்த் சிலை.. பாடபுத்தகத்தில் விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு வேண்டும் - சேலம் ஆர்.ஆர்.தமிழ்செல்வன் கோரிக்கை
அதன் பின் செய்தியாலர்களை சந்தித்த ஜி.கே.வாசன், “கேப்டனை முதல்வராக ஏற்றுக்கொண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நான் அந்த கூட்டணியில் செயல்பட்டதை பெருமையுடன் நினைவு கூற விரும்புகிறேன். கூட்டணி கட்சி தலைவருக்கும், கூட்டணி கட்சிகளுடைய தொண்டர்களுக்கும் அவர் கொடுத்த மரியாதையும், ஆதரவும் மறக்க முடியாதது.
ஒரு நல்ல மனிதரை, ஒரு நல்ல கலைஞரை, ஒரு சிறந்த அரசியல் தலைவரை இன்றைக்கு தமிழகம் இழந்து நிற்கிறது. கேப்டனுக்கு துணையாக அவரது இறுதி மூச்சு வரை செயல்பட்ட இன்றைய தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் மற்றும் கேப்டனின் அன்பு மகன்களுக்கும், கேப்டன் கட்சியினுடைய மாவட்ட தலைவர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேப்டனின் ரசிகர்களை பொருத்தவரை, கேப்டன் என்றால் அவர்களுக்கு கேப்டன் தான், மீளாத் துயரில் இருக்கும் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிங்க: "பலரின் பசியை போக்கியவர் விஜயகாந்த்” - விஜய் வசந்த் எம்.பி. கண்ணீர் மல்க அஞ்சலி!