சென்னையில் உள்ள பாமக அலுவலகத்தில் அதன் தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ஆளும் அரசு வன்னியர்களுக்காக 10.5 விழுக்காட்டை முதல் கட்ட இட ஒதுக்கீடு என சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், சாதி வாரியான கணக்கெடுப்பிற்குப்பின் 6 மாத காலத்திற்குள், புதிய இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது 40 ஆண்டு கால வன்னியர் உள் ஒதுக்கீடு போராட்டத்திற்கு கிடைத்த இடைக்கால வெற்றி.
இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீடு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் புள்ளி விவரங்களின் அடிப்படையில்தான், இந்த இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருக்கிறது.