சென்னை: பாமக தலைவராக ஜி.கே. மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் முடிவடைந்ததை தொடர்ந்து பாமக சார்பில் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் அவருக்கு பாராட்டு விழா நேற்று (மே24) நடைபெற்றது.
இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். இந்த விழாவுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை ஏற்றார். அதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ், "ஐநா சபைக்கு முதல் முதலாக வேட்டி அணிந்து சென்று சபையில் அமர்ந்தவர் ஜி.கே.மணி. உழைப்பு தியாகம் என இருப்பவர்.சிறு வயதில் விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், பின்பு ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் பொது வாழ்வில் ஈடுபட்டு மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்.
"ஜி.கே.மணியின் செல்போனுக்கு வாயிருந்தால் அழுது விடும். ஏனென்றால் எப்போதும் பாமக சார்ந்து யாரிடமாவது பேசிக்கொண்டே இருப்பார். அவர் பொதுமக்களுக்கு ஆற்றிய சேவைகளை அறிந்து கட்சியில் இணைத்துக்கொள்ள எம்.ஜி.ஆர் அழைப்பு விடுத்தார். ஆனால் அதை மறுத்து ராமதாஸ் உடன் இணைந்து மக்களுக்கு தொடர்ந்து பணி செய்து வருகிறார் ஜி.கே.மணி" என்று புகழாரம் சூட்டினார்.