சென்னை: அண்ணாநகரில் இயங்கி வரும் "ப்ரோ மேக்கப்" மணப்பெண் அலங்கார நிறுவனத்தின் ஏழாம் ஆண்டு விழாவினை கொண்டாடும் விதமாகத் திரைப்பட நடிகை நமிதா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை நமிதா, “பல வருடத்திற்குப் பிறகு இந்த மேக்கப் நிறுவனத்தைப் புதிதாக மறுசீரமைப்பு செய்து தொடங்கி இருக்கிறோம். பல நூறு இடங்கள் இருந்த போதிலும் அதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆனால் அங்கு பயிற்சி வகுப்புகளும் எடுக்கப்படுகின்ற நிலையில் பணம் அதிகமாகச் சம்பாதிப்பதற்காக சில மேக்கப் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கே 45 நாள் வகுப்பு எடுக்கப்படுகிறது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் வகுப்பு எடுக்கப்படுகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பெண்கள் தனித்துச் செயல்படுவதற்காகவும் பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ்வதற்காகவும் இது போன்ற நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருக்கிறது.
டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த நடிகை நமிதா, “மல்யுத்த வீராங்கனைகள் பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பதை நேற்று தான் முழு விவரங்களையும் பார்த்தேன். குற்றவாளியாகப் பாவிக்கப்பட்டுள்ள அரசியல் தலைவருக்குத் தன்னை நிரூபிக்கத் தயாராக இருக்கிற போது, அவருக்கு வாய்ப்பு கொடுங்கள்” எனக் கூறினார்.