சென்னை: காதலித்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ரூ.68 லட்சம் பெற்றுக்கொண்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்யவுள்ள காதலன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவர், மதுரவாயல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது வழக்கறிஞர்களுடன் சென்று புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், தான் 10ஆம் வகுப்பு படிக்கும்போது தன்னுடன் படித்த ஆண் நன்பருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அவர் தன்னை காதலிப்பதாகக் கூறினார்.
இருவரும் படிக்கும்போது காதலித்து வந்த நிலையில், கல்லூரியில் படிக்கும் போதும் காதல் தொடர்ந்த நிலையில் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி பலமுறை தன்னிடம் தவறாக நடந்து கொண்டார். தனது பூர்வீக சொத்தை விற்று வந்த பணத்தில், காதலன் சிறுக சிறுக ரூ.68 லட்சம் பணத்தைப் பெற்று கொண்டதாகவும்; தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தான் பலமுறை கூறியும் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்தார்.
பின்னர் விசாரித்தபோது அவர் பணத்தை பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முக்கியப்பொறுப்பில் உள்ள நபரின் மகளை திருமணம் செய்துகொள்ளப் போகிறார். தன்னை காதலித்து உல்லாசமாக இருந்து விட்டு, தன்னிடமிருந்து ரூ.68 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய காதலன் மற்றும் அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்தார்.