சென்னை:திருச்சியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது-22). இவர் 12-ஆம் வகுப்பு படித்த நிலையில் வெளி நாட்டிற்கு சென்று வேலை செய்து அதிகபணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக சென்னையில் வசித்து வரும் சதீஷ்குமார் (வயது-23) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரிடையே உருவான நட்பு காதலாக மாறியது.
இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர, இரு வீட்டாரும் இவர்களது காதலை ஏற்றுக் கொண்டுள்ளனர். எப்படியாவது தனது காதலனை நேரில் சந்திக்க வேண்டும் என்று எண்ணி, ஐஸ்வர்யா கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். தாம்பரம் அடுத்த சேலையூர் மகாலட்சுமி நகரில் சதீஸ்குமார் அவரது தங்கை சத்தியாவுடன் வசித்து வந்துள்ளார்.
பின்னர், ஐஸ்வர்யா வெளிநாடு செல்ல வேண்டும் என்ற கனவோடு இருப்பதை சதீஷ்குமாரிடம் கூறியுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக சதீஸுடனே தங்கியுள்ளார். மேலும் இதுகுறித்து, ஐஸ்வர்யா சதீஸுடன் தங்குவதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதை மீறி சதீஷ்குமார் வீட்டில் ஐஸ்வர்யா தங்கியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சதிஷ் கல்லூரி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் பகுதி நேர வேலையாக ஸ்விக்கி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று (அக்.23) சதீஷ்குமார் வேலைக்குச் சென்ற நிலையில், ஐஸ்வர்யா அவருக்கு போன் செய்து எங்கு இருக்கின்றாய்? எப்போ வீட்டிற்க்கு வருவாய்? என கோபமாக பேசி, சதீஷ்குமாரை திட்டிவிட்டு போனை வைத்துள்ளார்.
பயந்து போன சதீஷ்குமார், உடனே தன் தங்கை சத்யாவுக்கு போன் செய்து, அவரது அறைக்குச் சென்று ஐஸ்வர்யாவை பார்க்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து உடனே சத்யா சதீஸின் அறைக்குச் சென்று பார்தபோது, அறைக்கதவு உள்பக்கம் பூட்டி இருந்துள்ளது. பலமுறை கதவை தட்டியும் ஐஸ்வர்யா திறக்காததால் உடனே வீட்டின் உரிமையாளர் அண்ணாமலை உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை உடனே இது குறித்து சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல் துறையினர் ஐஸ்வர்யாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சதீஷ்குமாரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:செங்கல்பட்டில் மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!