சென்னை:திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த மோரை கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ்-சௌபாக்கியா தம்பதியின் 7 வயது மகள் தான்யா முகச்சிதைவு நோயால் 6 வருடங்களுக்கும் மேலாக அவதியுற்று வந்தார். இந்த சிறுமியின் நிலையை சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மூலமாக அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக சிறுமிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் திருப்பெரும்புதூர் அருகே உள்ள சவிதா மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு முதற்கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. முதலமைச்சர் ஸ்டாலினும் மருத்துமனையில் இருந்த சிறுமி தான்யாவை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். முதற்கட்ட அறுவை சிகிச்சை முடிவுற்று வீடு திரும்பிய சிறுமி தான்யாவிற்கு மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் சிறுமியின் முகம் இயல்பு நிலைக்கு திரும்ப மேலும் சில கட்ட அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்த நிலையில், இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சைக்காக ஜனவரி 5ஆம் தேதி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்து மூன்று நாட்களுக்குப் பின் சிறுமி தான்யா நேற்று (ஜன 13) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.