சென்னை: புளியந்தோப்பு கே.எம். கார்டன் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண், 12ஆம் வகுப்பு முடித்து விட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.
பெண் கடத்தல்
இந்நிலையில் நேற்று (ஜூலை 7) மாலை பணிமுடிந்து சூளை அஷ்டபுஜம் சாலை வழியாக அந்தப்பெண் நடந்து வந்தபோது, அவரது பக்கத்துத் தெருவில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரான தினேஷ் என்கிற ஹைட் தினேஷ் (25) என்ற இளைஞர், பெண்ணை வீட்டில் விடுவதாகக் கூறி, ஆட்டோவில் ஏற்றியுள்ளார்.
திடீரென வீட்டிற்குச் செல்லும் பாதையில் செல்லாமல் சிந்தாதிரிப்பேட்டை, பாரிமுனை, எண்ணூர் ஆகியப் பகுதிகளில் ஆட்டோ சென்றுள்ளது. பின்னர் அப்பெண்ணை எண்ணூரில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து, தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி, ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் தனது கையை அறுத்து மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், உடனே தனது தாயிடம் அலைபேசி மூலமாக தினேஷ் தன்னைக் கடத்தி விட்டதாகவும், தற்பொழுது எண்ணூரில் ஒரு வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெண்ணின் தாய் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து அவ்விடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அப்பெண்ணை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பெண்ணிடம் விசாரணை
அப்போது, அப்பெண்ணின் தோழியின் கணவன் தான் தினேஷ் என்பது தெரியவந்தது.
மேலும் நேற்று (ஜூலை 7) வீட்டில் விடுவதாகக் கூறியதால் ஆட்டோவில் அப்பெண் ஏறியதாகவும்; ஆட்டோவை மற்றொருவர் ஓட்ட, இவர் பின்னால் அமர்ந்து கொண்டு பல இடங்களில் சுற்றியதாகவும்;பின் தனது தோழியின் பழக்கவழக்கம் சரியில்லை எனவும்; அதனால் தன்னைத் திருமணம் செய்துகொள்ளக்கூறி கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும்; அதற்குத் தான் மறுப்பு தெரிவித்ததால் தினேஷ் தனது கையை அறுத்துக் கொண்டு மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் காவல் துறையினரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து தினேஷ் தன்னை கொடுங்கையூர் அருகே, ஒரு இருட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கஞ்சா அடித்ததாகவும்; அப்போது சிறுநீர் கழிக்க வேண்டும் எனக்கூறி தினேஷிடமிருந்து தப்பி, அந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் கதவுகளைத் தட்டியதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
அப்போது 70 வயது முதியவர் கதவைத் திறந்து அடைக்கலம் கொடுத்ததாகவும்; அவரிடம் நடந்த விசயங்களைக் கூறி அவரின் அலைபேசி மூலமாக தாய்க்குத் தான் இருக்கும் இடத்தை தகவல் தெரிவித்ததாகவும் அப்பெண் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து காவல் துறையினர் சென்று அப்பெண்ணை மீட்டது தெரியவந்துள்ளது. விசாரணை முடிந்த பின் அப்பெண்ணை தாயிடம் ஒப்படைத்தனர்.
காவல் துறையினரிடம் சிக்கிய ஆட்டோ ஓட்டுநர்
மேலும் கடத்தலில் ஈடுபட்ட தினேஷின் அலைபேசி எண்ணை வைத்து, அவர் சென்ட்ரலில் பதுங்கி இருப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அங்கு சென்று கஞ்சா போதையிலிருந்த தினேஷ், அவனுக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் இம்ரான் ஆகிய இருவரையும் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது கடந்த 3 வருடத்திற்கு முன்பாக தினேஷின் மனைவி பிரிந்து சென்று வேறு ஒருவருடன் வாழ்ந்து வருவதாகவும்; அன்று முதற்கொண்டு பல பெண்களிடம் பேசி, திருமணம் செய்யாமல் தினேஷ் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. அதே முயற்சியை மனைவியின் தோழியிடமும் தினேஷ் முயற்சித்திருக்கிறார்.
சம்பவத்தன்று கஞ்சா போதையிலிருந்த தினேஷ் அப்பெண்ணைக் கடத்தி சென்று திருமணம் செய்ய முயன்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தினேஷ் மற்றும் இம்ரான் மீது கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:16 ஏக்கர் நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகர்: பாதிக்கப்பட்டவர் தீக்குளிக்க முயற்சி