சென்னை:ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, மத்திய அரசு 'ஆபரேசன் கங்கா' என்னும் பெயரில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் மூலம் பாதுகாப்பாக மீட்டுவருகிறது. இதில், இதுவரை விமானங்கள் மூலம் 88 தமிழ் மாணவர்கள் உள்பட 1,370 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 2ஆவது நாளாக 45 பேர் வந்துள்ளனர். இந்நிலையில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களுடன் சிறப்பு விமானம் நேற்று (மார்ச்.1) டெல்லி வந்தது. இதில், 3ஆவது நாளாக நேற்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 43 மருத்துவ மாணவ- மாணவிகள் வந்தனர். இதில் கன்னியாகுமரியைச்சேர்ந்த 3 பேர் திருவனந்தபுரத்திற்கும், கோவை மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த தலா 2 பேர் என மொத்தம் 7 பேர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேராக அந்த நகரங்களுக்கும் சென்றனர்.
மேலும், சென்னை 13, கோவை 4, மதுரை-3, தர்மபுரி-1 திருநெல்வேலி 1, தூத்துக்குடி-1, விழுப்புரம்-3, செங்கல்பட்டு-1, சேலம்-1, வேலூர்-3 உள்பட 37 பேரும் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தனர். மாணவர்களைத் தமிழ்நாடு அரசின் சார்பில் அயலக நலம் மற்றும் மறுவாழ்வு, சிறுபான்மையினர்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின்னர் அவரவர் சொந்த ஊர்களுக்குத் தமிழ்நாடு அரசின் செலவில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது, 'தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசிற்குக் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத் தமிழ்நாடு மாணவர்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறார்கள். இதுவரை சுமார் 88 மாணவர்கள் வந்துள்ளார்கள். மாணவர்களை இல்லம் சேரும்வரை தமிழ்நாடு அரசின் பாதுகாப்பில் இருப்பார்கள். பதிவு செய்யும் மாணவர்களைத் தூதரகத்திற்கு அனுப்பி, அவர்களை விரைவாக மீட்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார்.