சென்னை:உலகத்தையே ஓர் உலுக்கு உலுக்கியது கரோனா என்னும் கொடிய தொற்று. இந்த தொற்று பல நாடுகளை தாக்கியதோடு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.
இதனால் ஏற்பட்ட நஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. இக்கொடிய தொற்றினால் பலர் உயிரை இழந்ததோடு, மக்கள் தங்களது வாழ்வாதாரத்தையே இழந்தனர்.
பொருளாதாரப் பாதிப்பு
இவை பல மக்களின் பொருளாதாரத்தை வேரோடு சாய்த்துள்ளது. ஒருவேளை உணவுக்கே திண்டாடும் அளவிற்கு ஏழை, எளிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் கரோனா பேரிடர் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டும், பொது முடக்கம் அறிவிக்கப்பட்டும் இருந்தது. இந்த பொது முடக்கத்தினால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
கரோனாவால் முதலில் பள்ளிகள் முழுவதும் மூடப்பட்டு இருந்தாலும், சில மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. மேலும் மாணவர்களுக்கு தேர்வுகளையும் ஆன்லைன் மூலம் நடத்தி, அன்மையில் தேர்வு முடிவுகளையும் வெளியிட்டனர்.
மாணவர்களுக்கு கல்வி அளிக்க தயார் அவதியில் பெற்றோர்
தற்போது கரோனா இரண்டாம் அலையானது சற்றே குறைந்து வருவதனால், பள்ளிக்கல்வித்துறை, பல ஆலோசனை கூட்டங்களை நடத்தி, பலதரப்பட்ட மக்களிடம் ஆலோசனை மேற்கொண்டு, வருகின்ற செப்டம்பர் மாதம் பள்ளிகளைத் திறப்பதாக கூறியுள்ளது.
இதைக் கேட்ட பெற்றோர் மகிழ்ச்சியில் இருப்பதோடு சிறிது சோகத்திலும் மூழ்கியுள்ளனர். அதாவது, கரோனா பெருந்தொற்றினால் பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டு பெற்றோர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
கரோனாவால் தங்களது வேலையை இழந்த பெற்றோர், தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்குத் தங்களின் குழந்தைகளை மாற்றி வருகின்றனர்.
5,000 ரூபாய் போதும்
இதுகுறித்து பஞ்சாப் அசோசியேசன் மூலம் நடத்தப்படும் கில் ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள் கூறும்போது, 'இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில் இடம் கிடைக்காத மாணவர்களையும், எல்கேஜி வகுப்பில் சேர்த்துக் கொள்ளத் தயாராக உள்ளோம்.
கல்விக் கட்டணமாக 5,000 ரூபாய் நடப்பாண்டில் முடிந்தால் செலுத்தலாம். அவ்வாறு செலுத்த முடியாத மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் நாங்கள் ஏற்றுக்கொண்டு, படிப்பினை வழங்கி வருகிறோம்.
கடந்தாண்டு பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணத்தை செலுத்தாமல் உள்ளனர். கரோனா பாதிப்பினால் வேலை இழந்து பொருளாதார பாதிப்பிற்குள்ளான பெற்றோர்களுக்குத் தொடர்ந்து கல்வி கற்பித்து வருகிறோம்.
வழிகாட்டுதல்
மேலும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள், நிர்வாகிகள் உட்பட 100 விழுக்காடு பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளோம்.
இதையடுத்து பள்ளியில் சிறிய மருத்துவமனை அமைக்கப்பட்டு மருத்துவரும் நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகளுக்கு சிறிய பாதிப்பு என்றாலும் உடனடியாக கண்டறிந்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
தற்போது மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் ஆன்லைன் கல்வியையும் சிறப்பாக நடத்தி வருகிறோம்.
அரசு வழிகாட்டுதலின்படி 50 விழுக்காடு மாணவர்கள் பள்ளிக்கு வந்தாலும், மீதமுள்ள 50 விழுக்காடு மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்கும் வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளோம்' எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு