சென்னை : பத்திரிகையாளர் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தற்போது தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி தட்டுபாட்டை போக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசு எந்த விதமான பாகுபாடின்றி தடுப்பூசியை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்.
கரோனா இரண்டாம் அலைக்கு ஒன்றிய அரசு தான் காரணம்
கரோனா இரண்டாம் அலை இந்த அளவிற்கு பரவியதற்கு ஒன்றிய அரசுதான் காரணம். கரோனாவை முறையாக கட்டுப்படுத்த முடியாததால் சுகாதாரத் துறை அமைச்சர், இணை அமைச்சரை ராஜினாமா செய்ய வைத்துள்ளது. ஆனால் அதற்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டிய பிரதமர் அதே பதவியில் நீடிக்கிறார்.
முறையாக மருத்துவ ஆராய்ச்சி செய்வதில்லை
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை செயல்பட உடனடியாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் 798 மருத்துவர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளது வருத்தமளிக்கிறது. மருத்துவ ஆராய்ச்சியை துரிதப்படுத்த வேண்டும். இந்தியாவில் முறையாக மருத்துவ ஆராய்ச்சி செய்வதில்லை.
கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. அதனை வழங்க ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.