சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் நெஸ்ட் தேர்வை காலவரையின்றி தள்ளி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும், தேர்வை தள்ளி வைத்திருப்பது மட்டும் போதாது, நெக்ஸ்ட் தேர்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் எனவும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இந்தியாவில் எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கு தேசிய அளவில் ஒரே தேர்வாக நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது. அதற்குப் பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து தேசிய மருத்துவ ஆணையம் நெக்ஸ்ட் தேர்வு தற்பொழுது நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் கூறுகையில், “எம்.பி.பி.எஸ் படிப்பில் நெக்ஸ்ட் என்றத் தேர்வை தேசிய மருத்துவ ஆணையம் திணிப்பதற்கு திட்டமிட்டு இருந்தது. மருத்துவப் படிப்பை முடித்து வெளியேறுவதற்கு, தேசிய வெளியேறும் தேர்வு என்ற நெக்ஸ்ட் ( NExT) தேர்வை ஒன்றிய அரசு புகுத்த முயன்றது.
அதாவது இத்தேர்வின் படி இறுதியாண்டு மருத்துவ எழுத்துத் தேர்வாக நடத்தப்படும். MCQ அடிப்படையில் கணினி வழித் தேர்வான "நெக்ஸ்ட் " முதல்கட்ட தேர்வில் (NEXT STEP ONE) வெற்றி பெற்றால் தான் பயிற்சி மருத்துவராக முடியும். பயிற்சி மருத்துவத்தை முடித்த பிறகு, "நெக்ஸ்ட்" இரண்டாம் கட்டத் தேர்வான, கிளினிக்கல் (NEXT STEP TWO PRACTICAL ) தேர்வில் வெற்றி பெற்றால் தான் மருத்துவராக பதிவு செய்து கொண்டு தொழில் செய்ய முடியும்.
இந்தத் தேர்வுகள், மாணவர்களை பயிற்சி மருத்துவராகுவதற்கு முன்பும், பயிற்சி மருத்துவக் காலத்திலும் புத்தகப் புழுக்களாக மாற்றிவிடும். கிளினிக்கல் அறிவை, திறமையை வளர்த்துக் கொள்வதற்கு தடையாக அமையும். மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக மாறும். முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் 200 வினாக்கள் மட்டுமே உண்டு. அது மூன்றரை மணி நேரம் மட்டுமே நடக்கும் தேர்வாகும். ஆனால் நெக்ஸ்ட் தேர்வோ 540 வினாக்கள் அடங்கியது.