ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அஞ்சல்துறை தேர்வில் தமிழ் தேர்வர்களின் சிக்கலுக்கு தீர்வு! - தமிழ்நாடு தலைமைப் பொது மேலாளர்

அஞ்சல் துறைக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் நிரப்ப முடியாமல் தவித்த தமிழ் தேர்வர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என அஞ்சலக இயக்குனர் உறுதி அளித்துள்ளதாக எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

GDS
GDS
author img

By

Published : Feb 8, 2023, 2:02 PM IST

Updated : Feb 8, 2023, 3:06 PM IST

சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று(பிப்.7) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்தியா முழுவதும் 40,000 கிராமின் டாக் சேவக் (GDS) காலியிடங்களுக்கு பணி நியமனங்களை அஞ்சல் துறை மேற்கொள்ளவுள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்கள் 3,167. பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இந்த பணி நியமனங்கள் நடக்கின்றன.

கிராமின் டாக் சேவக் காலியிடங்களுக்கு ஜனவரி 27ஆம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பங்கள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு விண்ணப்பிக்க முடியாமல், தமிழ்நாடு மாநில தேர்வர்கள் தவித்து வருகிறார்கள்.

ஆன்லைன் விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பாட வாரியாக கேட்கப்பட்டுள்ளன. மாநில பாட முறையில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களே உண்டு. ஆனால், ஆன்லைன் விண்ணப்பத்தில் 6வதாக "தெரிவு மொழி" என்ற பாடமும் இடம்பெற்றுள்ளது.

இந்த பாடப்பிரிவு மற்ற மாநிலங்களில் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இல்லை. அதனால், தமிழ்நாடு தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. இது தொடர்பாக நான் அஞ்சல் துறை செயலாளர் வினீத் பாண்டே, தமிழ்நாடு தலைமைப் பொது மேலாளர் பி.செல்வக்குமார் ஆகியோருக்கு கடிதங்களை எழுதி இருந்தேன்.

இந்த நிலையில், இன்று என்னிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அஞ்சல் பொது நிர்வாக துணை இயக்குனர் ராசி சர்மா, இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும், 6வதாக உள்ள "தெரிவு மொழி" பகுதி தமிழ்நாடு தேர்வர்களுக்கு தடையாக இல்லாத வகையில் விண்ணப்பம் மாற்றப்படும் என்றும், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாடு தேர்வர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பெற்றோர்களே உஷார்.. முறையான அனுமதி பெறாமல் இயங்கும் 162 தனியார் பள்ளிகள்!

Last Updated : Feb 8, 2023, 3:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details