சென்னை: 'மிக்ஜாம்' (Michaung) புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த டிச.3 நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
மேலும், சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததாலும், மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, நேற்று காலை முதல் பல்வேறு முக்கிய சாலைகளில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்றன. இந்நிலையில், மாநகரின் முக்கிய சாலைகள் படிப்படியாக சீராகி வருகிறது.
மேலும், புழல் ஏரியில் நீர் திறக்கப்பட்டு உபரி நர் வெளியேறும் நிலையில், மஞ்சம்பாக்கம் - வடபெரும்பாம்பாக்கம் இடையேயான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வேளச்சேரி, பெரும்பாக்கம், துரைப்பாக்கம், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை இதையும் படிங்க:மழை நின்று 2 நாட்களாகியும் வடியாத வெள்ள நீர்.. அவல நிலையில் உள்ள அரும்பாக்கத்தின் கழுகுப்பார்வை காட்சிகள்!
இந்நிலையில் தற்போது, மாநகராட்சி சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உணவு குறித்த பட்டியல் வெளியாகி உள்ளன. அதில் கடந்த நவம்பர் 30ஆம் தேதி முதல், இன்று வரை (டிச.6), சென்னையில் உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரன முகாம்களில் காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவு வழங்கப்பட்ட அளவை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இதுவரை அமைக்கப்பட்டுள்ள 58 நிவாரன முகாம்களில், இன்று காலை உணவு வழங்கப்பட்டதோடு மொத்தம் 7 ஆயிரத்து 396 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நேற்று (டிச.5) முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 526 பேராக இருந்த நிலையில், இன்று 7 ஆயிரத்து 396 பேராக அதிகரித்துள்ளது.
அதேபோல், இன்று (டிச.6) காலை வரை, வெள்ள நீர் சுழ்ந்த பகுதிகளில் மொத்தம் 3 லட்சத்து 39 ஆயிரம் நபர்களுக்கு உணவு மாநகராட்சி சார்பில் வழங்கபட்டுள்ளது என சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்ட குறிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. முன்னதாக நேற்று மட்டும் 11 லட்சத்து 18 ஆயிரத்து 350 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:“டி.டி.சி அப்ரூவல் என்று சொல்லி ஏமாற்றி விட்டார்கள்” வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் குமறும் மக்கள்!