சென்னை:சென்னை மாநகராட்சி மாமன்றம் ஒப்புதல் தராத காரணத்தால் நாளை நடத்த திட்டமிட்டு இருந்த சென்னை முதல் ஏரியா சபா (அல்லது) நகர சபை நடைபெறவில்லை என தகவல்கள் வெளியாகிய நிலையில், நாளை ஜன.26 ஆம் தேதி குடியரசு தினத்தில் இந்த நகர சபையை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கிராமப்புற பகுதிகளில் ஜனவரி 26ஆம் தேதி கிராமசபை (Gram Sabha) நடைபெறும். ஆனால், சென்னை போன்ற பெரிய நகரகளில் இதுபோன்று சபைகள் எதும் நடைபெறுவதில்லை. நகரகளிலும் நகரசபை (Urban councils) நடத்த வேண்டும் என்பது மக்களின் நீட நாளாக கோரிக்கை இருந்தது. கடந்த 6 ஆண்டுகளாக சென்னையில் வார்டு தேர்தல் (உள்ளாட்சி தேர்தல்) நடைபெறாமல் இருந்ததால் மாநகராட்சி அதிகாரிகளே மக்கள் தேவை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்து வந்தனர்.
மாநகராட்சி மாமன்றத்தில் நடப்பதென்ன?: இந்த நிலையில், கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்று திமுக, சென்னை மாநகராட்சியை கைப்பற்றியது. இதனால், இந்த ஆண்டு நகரசபை நடைபெறும் என்று எதிர்ப்பார்ப்பு உடன் அனைத்து பணிகளும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் செய்து வந்தனர். இதனைத்தொடர்ந்து, நகரசபை நடந்த மாமன்றம் ஒப்புதல் அளிக்காத காரணத்தினால் இந்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நடைபெற இருந்த நகரசபை நடைபெறவில்லை. மேலும், பிப்ரவரி மாதம் நடைபெறும் என மாநகராட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி மறுப்பு: தாமதத்திற்கு காரணம் என்னவென்றால், சென்னையில் மொத்தம் 200 வார்டுகளில் 2000 இடங்களில் நகரசபையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி சார்பில் ஒருவர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது. பல வார்டு உறுப்பினர்கள் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டனர். ஆனால், இன்னும் சில வார்டுகளில் அந்த பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதால் மாமன்றம் நகரசபைக்கு அனுமதி தராமல் உள்ளனர்.
சென்னையில் முதல் நகரசபை நடக்காதா.. காரணம் என்ன? நகரசபை-ஜனநாயக திருவிழா: இது தொடர்பாக Voice of People என்ற அமைப்பின் உறுப்பினர் சாரு (Charu) பேசிய போது, " நாங்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்தோம். ஆனால், நாளை நடைபெறவில்லை; மாறாக, பிப்ரவரியில் நடைபெறும் என்று தெரிவித்து இருக்கின்றனர். விரைவில் நடத்தினால், சிறப்பாக இருக்கும். சமீபத்தில் சென்னை சங்கமம் சிறப்பாக நடத்தினார்கள். இதுவும் ஜனநாயக திருவிழா; எனவே, இந்த நிகழ்ச்சியையும் சிறப்பாக நடத்த வேண்டும்.
சென்னையில் பல பிரச்னைகளுக்கு தீர்வு: இது நடைபெற்றால் மக்கள் தேவை விரைவில் தீர்வு காணப்படும். ஏனென்றால், மூன்று மாதத்திற்கு ஒரு முறை இந்த ஏரியா சபா நடைபெறும். எனவே, ஒருமுறை செய்வதாக தெரிவித்து செய்யாமல் இருந்தால் அதை மூன்று மாதம் கழித்து வார்டு உறுப்பினரிடம் நாம் கேள்வி எழுப்பலாம். அதுமட்டுமின்றி நடத்துவதற்கு முன்பாக மக்களிடையே இதைப் பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும் இந்த ஏரியா சபா விவரம் குறித்து அறிந்துகொள்ள: https://chennaicorporation.gov.in/gcc/area_sabha/
நகரசபை எதற்காக?:சென்னையில் தீர்க்க முடியாத பிரச்னைகளுள் ஒன்றான அரசு டாஸ்மாக் கடைகளை இந்த நகரசபைக் கூட்டம் மூலம் தீர்மானம் கொண்டு வந்து தடுப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது. உதராணத்திற்கு ஒரு கிராமத்தில் இத்தகைய மக்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வகையில் அரசு மதுபானக் கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யும்போது, அந்த கிராமத்தில் ஊராட்சியின் அனைத்து பகுதியினரும் ஒன்று கூடி தங்களின் சந்ததியினரின் நலனையும் தங்கள் கிராமத்தின் முன்னேற்றத்தையும் மனதில் கொண்டு டாஸ்மாக்கிற்கு எதிராக கிராமசபையில் தீர்மானம் கொண்டு வருவர். இவ்வாறு செய்வதால், அப்பகுதியில் டாஸ்மாக் கடைகளை ஒழிக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: 'வாழ்க தமிழ்நாடு..வளர்க பாரதம்' தமிழில் கூறி உரையை முடித்த ஆளுநர்