சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம் சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனையடுத்து மழைநீர் அகற்றும் பணியானது மாநகராட்சி சார்பில் இன்று (நவ.30) நடைபெற்றது. குறிப்பாக நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், தியாகராய நகர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் கனமழை காரணமாக மழைநீர் சாலைகளில் வெள்ளம்போல தேங்கியது.
இதேபோல், சென்னையில் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி மற்றும் கொரட்டூர் ஆகிய பகுதிகளின் குடியிருப்பு பகுதியின் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் 10,000-க்கும் மேற்பட்ட சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கூறுகையில், "நேற்றைய தினத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் 10 செ.மீ-க்கும் மேல் மழை பெய்துள்ளது. குறிப்பாக, 145 இடங்களில் நீர் தேங்கிய நிலையில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது.
சில இடங்களில் வடிகால்களில் தண்ணீர் உள் வாங்காததால் நீர் தேங்கி உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை. தொடர்ந்து வடகிழக்கு பருவமழையின் நிலைமையையும், சென்னையில் மழைநீரானது தேங்காமல் இருக்க தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது தொடர்பாக வந்த புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. மழைநீரை அகற்றும் பணியில் 16,000 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, அம்பத்தூர், கொரட்டூர் பகுதிகளில் போர்கால அடிப்படையில் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகின்றது" என்று தெரிவித்தார்.
முன்னதாக, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஒரு கிலோ வேப்ப முத்து 100 ரூபாயா? வனம் சார்ந்த விவசாய பொருட்கள் விற்பனை செய்ய புதிய செயலி..