சென்னை:பாரதிய ஜனதா கட்சியில் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக பதவி வகித்து வந்த காயத்ரி ரகுராம், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், அண்ணாமலை பாஜகவின் தலைவராக இருக்கத்தகுதி இல்லாதவர் என்றும் காயத்ரி கூறியிருந்தார்.
இதுதொடர்பாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் அண்ணாமலை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை காயத்ரி முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், காயத்ரி ரகுராம் நேற்று (பிப்.21) விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இதனையடுத்து காயத்ரி ரகுராம் உடனான சந்திப்பு குறித்து திருமாவளவன், "அம்பேத்கர் திடலுக்கு வந்த காயத்ரிக்கு 'உலக வரலாற்றில் பெண்கள்' எனும் நூலைப் பரிசாக அளித்தேன். அன்னை சாவித்திரிபாய் ஃபுலே அவர்களின் சகிப்புத் தன்மையும், ஜெயலலிதா அம்மையாரின் போர்க் குணமும் பொதுவாழ்வில் ஒவ்வொரு பெண்மணிக்கும் தேவை என்பதைச் சொல்லி அவரை வாழ்த்தினேன்.
கருத்தியல் முரண்களைக் கடந்து, மனித உறவுகளுக்கான மாண்புகளைப் போற்றுவது சிறுத்தைகளின் சிறப்பாகும். அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்த காயத்ரி ரகுராமை வரவேற்றுச் சிறப்பித்தோம். ஏப்ரல் 14 - அம்பேத்கர் பிறந்தநாளில் அவர் தொடங்க இருக்கும் சக்தியாத்ரா வெற்றி பெற வாழ்த்தினோம்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.