சென்னை:கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகை வாசல் முன்பு கடந்த 25 ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசுவதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மூன்று பக்கங்கள் கொண்ட புகார் மனுவை அளித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, இந்தச் சம்பவத்தில் கருக்கா வினோத் மட்டும் தான் ஈடுபட்டார் என காவல்துறையினர் விளக்கம் அளித்து இருந்தனர்.
மேலும் கருக்கா வினோத்தைக் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, ரவுடி கருக்கா வினோத்தை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கிண்டி காவல் துறையினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தனர். அதனால் கருக்கா வினோத்தை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக, புழல் சிறைத்துறை அதிகாரிகள் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றம் அழைத்து வந்தனர்.