சென்னை:சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை டிச.4 அன்று புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல் (MICHAUNG), டிச.5 ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே கரையைக் கடந்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழையால் ஏற்பட்ட வெள்ள நீர் வடிந்தாலும் கூட, இன்னும் சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் மக்கள் வீட்டிலும், நிவாரண முகாம்களிலும் முடங்கியுள்ளனர்.
இந்த புயலால் சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம், துரைப்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி: மழை வெள்ளம் முடிந்தும் 3ஆவது நாளாக, வேளச்சேரி பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் தனியார் படகுகள் மூலம் மக்கள் வெளியேறி வருகின்றனர். குடிநீர், பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் மக்கள் தவித்து வந்த நிலையில், தனியார் மற்றும் அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கும் பணியாது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தப் பகுதியில் மின்சாரம், தொலைத்தொடர்பு சேவையானது இன்னும் கிடைக்கவில்லை என மக்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. சென்னையில் பல பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவையானது மெதுவாக சீராகி வருகிறது. வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. ராணுவ வீரர்கள் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளனர். மேலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சாலையில் மலை போல் தேங்கியுள்ள குப்பைகள்: புயல், வெள்ளம் காரணமாக பொதுமக்கள் கடந்த 3 நாட்களாக சேர்த்து வைத்திருந்த குப்பையை தெரு ஓரங்கள், காலி நிலங்கள் மற்றும் நீர்நிலைகளின் அருகில் கொட்டி வருகின்றனர். இதனால் சென்னை நகரின் ராயப்பேட்டை, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், அடையாறு, பட்டினப்பாக்கம், அம்பத்தூர், கொரட்டூர், பாடி, வில்லிவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் குப்பை குவியல்களாக காட்சியளிக்கின்றன.
மேலும் கடற்கரை ஓரங்களிலும் ஆங்காங்கே குப்பை குவியலாக காட்சியளிக்கின்றன. இதனால் குடியிருப்புப் பகுதிகளில் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகளையும், பட்டினப்பாக்கம் கடற்கரையில் இருக்கும் குப்பைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், இல்லையெனில் நோய் பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, “கடந்த 3 நாட்களாக சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும், குப்பை எடுத்துச் செல்லக்கூடிய லாரிகளை இயக்க முடியவில்லை. கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்குள் லாரிகளைக் கொண்டு செல்ல முடியவில்லை. மேலும் குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களையும் இயக்க முடியவில்லை. அதனால் தமிழகத்தின் பல உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து பணியாளர்கள் வாகனங்களுடன் வந்துள்ளனர்.
அவர்கள் உதவியுடன் குப்பையை அகற்றும் பணிகளை தொடங்கி இருக்கிறோம். விரைவில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது முதற்கட்டப் பணியாக, ஆற்றில் அடித்து வரப்பட்ட குப்பைகளை எடுக்கும் பணிகளானது நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் ஒக்கியம் கால்வாயில் அடித்து வரப்பட்ட சகதிகளை அகற்றும் பணியானது தொடர்ந்து வருகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மழை நின்று மூன்று நாட்களாகியும் மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் வெளியேறாத வெள்ள நீர்!