சென்னையை அடுத்த செங்குன்றம் பேருந்து நிலையத்தில் கடந்த எட்டாம் தேதியன்று இரவு காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த இளைஞர்கள் இருவரிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்துள்ளனர். இதனால், அவர்களைக் காவல் நிலையம் கொண்டு சென்று சோதனை செய்த போது, இருவரிடம் 15 கஞ்சாப் பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.
மேற்கொண்டு, அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாதவரத்தில் ரம்யா என்பவர் தங்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக கூறியதின் பேரில், அப்பெண்ணின் வீட்டிற்கும் காவல்துறையினர் சென்றனர். அப்போது, காவல்துறையினர் நடத்திய சோதனையில் அங்கு இருந்து 1.5 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர், செங்குன்றம் காவல்துரையினர் வழக்குப்பதிந்து, மூன்று பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதில் இரண்டு இளைஞர்களையும் புழல் சிறையில் அடைத்தனர்.