சென்னை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கண்ணமங்கலம் கிராமத்தைச்சேர்ந்தவர், சிவபாலன் (28). இவர் கடந்த மாதம் 27ஆம் தேதி அண்ணாசாலை எஸ்.பி.ஐ வங்கி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை வழிமறித்து கத்தியால் வெட்டி 20 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச்சென்றது. இதுதொடர்பாக சிவபாலன் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அண்ணா சாலை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவபாலனிடம் பணத்திற்குண்டான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றதும், சிவபாலன் குருவியாக செயல்பட்டதும் காவல் துறையினருக்குத்தெரியவந்தது. மேலும், குருவிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்பேரில் கீழ்ப்பாக்கம் துணை ஆணையரின் தனிப்படை காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது முகமூடி அணிந்த 6 நபர்கள் 4 இருசக்கர வாகனத்தில் 70 முதல் 80 கி.மீ., வேகத்தில் பாரிமுனைப்பகுதியிலிருந்து தனித்தனியாக பின் தொடர்ந்து வந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
1 லட்சத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் ஆய்வு: மேலும் நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தை கொள்ளையர்கள் பயன்படுத்தியதால் காவல் துறையினர் அவர்களை நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து குருவிகளை குறிவைத்து பணப்பறிப்பில் ஈடுபடும் பழைய குற்றவாளிகளின் புகைப்படத்தோடு ஒப்பிட்டபோதும் யாரும் சிக்கவில்லை. இதனையடுத்து அடுத்தகட்டமாக பாரிமுனை முதல் குரோம்பேட்டை வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்களை ஆராய்ந்து, அதில் சந்தேகப்படும் படியாக தொடர்பு கொண்ட நபர்களின் விவரங்களை சேகரித்தனர்.
இருந்தபோதிலும் காவல் துறையினருக்கு துப்பு கிடைக்காமல் தவித்தனர். சுமார் 15 நாள்களாக ஒருவித துப்பும் கிடைக்காமல் தவித்த காவல் துறையினர், அடுத்தகட்டமாக குருவியிடம் பணப்பறிப்பில் ஈடுபட்ட பழைய குற்றவாளியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பழைய குற்றவாளிகள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். கொள்ளையடிக்க புதுவித டெக்னிக்கை கையாளுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
புதுவித டெக்னிக்:குறிப்பாக கூகுளில் விர்ச்சுவல் எண் செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் வேறு நாட்டு எண்ணை எடுத்து அதன் மூலமாக வாட்ஸ்அப் தொடங்குவதாக தெரிவித்தனர். இதனைக்கேட்ட காவல் துறையினர் அதிர்ந்துபோயினர். மேலும், அந்த வாட்ஸ்அப் கால் மூலமாக தகவல் பரிமாறி கொள்ளையர்கள் திட்டம் தீட்டி கொள்ளையடித்திருப்பதாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கிய காவல் துறையினர், லொக்கேஷனை வைத்து செல்போனின் ஐபி முகவரியை ஆராய்ந்தனர். அதில், கொள்ளையர்கள் பாரிமுனைப்பகுதியில் வந்து செல்வது காவல் துறையினருக்குத் தெரியவந்தது. இதையடுத்து அங்கு 5 நாள்கள் முகாமிட்ட தனிப்படை காவல் துறையினர், சிவகங்கையைச் சேர்ந்த ஷேக் இஸ்மாயில் மற்றும் கொடைக்கானலைச் சேர்ந்த பாக்கியராஜ் ஆகியோரைக் கைது செய்தனர்.