சென்னை:அடையாறு பகுதியைச் சேர்ந்த பெண்மணி சாந்தி, நேற்றிரவு மெரினா லூப் சாலையிலிருந்து அடையாறு பகுதிக்குச் செல்ல ஆட்டோ ஏறியுள்ளார்.
அப்போது அந்த சமயத்தில் அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று, மழை பெய்வதால் கொஞ்சம் நேரம் ஆட்டோவில் அமர்ந்திருப்பதாகக் கெஞ்சியதால் அனுமதி அளித்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அந்த நான்கு நபர்களும் மதுபோதையிலிருந்ததால் சாந்தி அவர்களை ஆட்டோவில் இருந்து கீழே இறங்குமாறு கூறியுள்ளார்.
உடனே அந்த கும்பல் தான் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து ஆட்டோ ஓட்டுனரை மிரட்டித் தாக்கி விரட்டி அடித்துள்ளனர். பின்பு சாந்தியிடம் கத்தியைக் காட்டி காதில் அணிந்திருந்த தங்கக் கம்மல் மற்றும் பணத்தைக் கேட்டு மிரட்டிய போது, சாந்தி தரமறுத்து கூச்சலிட்டதால் உடனடியாக அருகிலிருந்த பொதுமக்கள் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர்.
மெரினாவில் நகை, பணத்திற்காக பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிய கும்பல் சாந்தி கூச்சலிட்டதால் கோபமடைந்த அந்த கும்பல் சாந்தியின் கழுத்தில் லேசாக வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களைச் சுற்றி வளைக்க முயன்ற போது, மூன்று பேர் தப்பியோட ஒருவர் மட்டும் கடற்கரையை நோக்கி ஓடினான். ஆனால் போலீசார் விடாமல் துரத்திச் சென்று கடலில் இறங்கி மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அயனாவரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பதும் இவன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்திருப்பதும் தெரியவந்தது. அதிகப்படியான போதையில் இருப்பதால் அவனிடம் போலீசாரால் விசாரணை நடத்த முடியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக மெரினா கடற்கரை போலீசார் தப்பி ஓடிய மூவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதுவரை இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் எதுவும் வரவில்லை.
இதையும் படிங்க:பட்டப்பகலில் கஸ்டமர் போல சலூனில் நுழைந்து கொள்ளையடித்த கும்பல்