சென்னை:அம்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவரை, இரண்டு இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்ற கும்பல், அவரை சாலையில் வைத்தே சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர், யஸ்வந்த். இவர் புழல் பகுதியில் இருந்து அம்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருக்கும்போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் இவரை பின் தொடர்ந்து சில நபர்கள் வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அம்பத்தூர் அருகே புதூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, யஸ்வந்தின் இருசக்கர வாகனத்தை மடக்கிய மர்ம நபர்கள், அவரை கீழே தள்ளி சரமாரியாக தலை, கை, கால்களில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார், பலத்த காயமடைந்த யஸ்வந்தை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.