சென்னையில் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி குற்ற சம்பவங்களை தடுக்கும்படி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி சென்னை கொளத்தூர் பகுதியில் போலீசார் ஆகஸ்ட் 18ஆம் தேதி இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர்.
அப்போது கொளத்தூர் கங்கை அம்மன் கோயில் தெருவில் சந்தேகத்திற்கிடமான வகையில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று குடியிருப்பு பகுதியில் சுற்றியது. உடனே கொளத்தூர் போலீசார் அதனை மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காருக்குள் கத்தி போன்ற ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த 7 பேரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த வரதராஜன் என்ற கைப்புள்ள ராஜ் தலைமையில் இந்த 6 பேரும் சென்னை வந்து இருப்பது தெரிய வந்தது. வரதராஜன் மீது 5 கொலை வழக்குகள், 10 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 17 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க:கணவன் - மனைவி தகராறு: தட்டிக்கேட்ட திமுக கவுன்சிலர் கணவர் உட்பட 6 பேர் மீது வழக்கு... நடந்தது என்ன?
இவருடன் வந்தவர்கள் கல்லூரி மாணவர்கள் கோகுல், கமல்தாஸ் மற்றும் கார் ஓட்டுனர் விஷ்வா மற்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சீனிவாசன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திலகர் என்பது தெரிய வந்தது. இவர்கள் இடப் பிரச்சினையில் ஒருவரை மிரட்டி இடத்தை காலி செய்யும் நோக்கத்திற்காக சென்னை வந்தது விசாரனையில் தெரிய வந்ததாக போலீசார் கூறி உள்ளனர்.