சென்னை மண்ணடி மாஸ்கன் சாவடியைச் சேர்ந்தவர், திவான் அக்பர் (45). முத்தியால் பேட்டையில் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். அவர் மூன்று நாள்களுக்கு முன்பு முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், "கடந்த 17ஆம் தேதி என்னை தஞ்சாவூரைச் சேர்ந்த தவ்பீக் தலைமையிலான கும்பல் காரில் கடத்திச் சென்றது.
அதன்பின் அவர்கள் வடபழனி, கிழக்கு கடற்கரைச் சாலை ஆகிய இடங்களில் அடைத்து வைத்து, அடித்து உதைத்து ரூ. 2 கோடி கேட்டு மிரட்டினர். உயிருக்கு பயந்து வீட்டிலிருந்த 2 கோடி ரூபாயை அவர்களிடம் கொடுக்க ஏற்பாடு செய்தேன். பணத்தைப் பெற்றபின் அந்தக் கும்பல், என்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் விட்டுவிட்டுச் சென்றது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
முதற்கட்டமாக காவல் துறையினர் புகாரின் உண்மை தன்மை குறித்து அக்பரிடம் விசாரணை நடத்தினர். ஏனென்றால் சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை காவல் துறைக்கு முன்பே தகவல் தெரிந்துள்ளது. ஆனால், அக்பர் புகார் கொடுக்கவில்லை. காவல் துறையினர் விசாரணைக்குப் பிறகே புகார் கொடுத்துள்ளார்.