விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த வட மாநிலத்தினர் சென்னை: தொடர் விடுமுறையோ அல்லது விழாக்காலமோ எதுவாக இருந்தாலும் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இதனால் விடுமுறை மற்றும் விழாக் காலங்களில் சென்னையின் முக்கிய போக்குவரத்து தளங்களான கோயம்பேடு, சென்டர்ல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், தாம்பரம் ரயில் நிலையம் உள்ளிட இடங்களில் கூட்டம் அலைமோதும்.
மேலும் சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி என அடுத்தடுத்து விடுமுறை வருவதால், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து உள்ளனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று (செப். 16) மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
பயணிகளின் வசதிகளுக்காக சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இன்று (செப் 17) முதல் இயக்கப்படவுள்ளன.
அதன்படி, மொத்தம் 1,250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்து உள்ளது. மேலும் சொந்த ஊர் செல்லும் மக்கள் திரும்புவதற்கு வசதியாக வரும் 18 மற்றும் 19 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் விநாயகர் சதுர்த்தி தமிழகத்தை விட வட இந்தியாவில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். இதனால் சென்னையில் இருக்கும் வடமாநிலத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வட மாநிலத் தொழிலாளர்களின் தலைகளாக காணப்படுகிறது. இந்நிலையில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வட மாநில தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்ததால் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
சென்னை, தாம்பரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கட்டுமான பணி போன்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பீகார், அசாம், ஒடிசா உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்தனர். தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதாலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்காகவும் ரயில் மூலம் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் ஆர்வமாக திரண்டனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் குவிந்ததால் தாம்பரம் ரயில் நிலையத்தில் கூட்டம் நெரிசலில் திக்குமுக்காடிப் போனது.
இதையும் படிங்க:அம்மா உணவக சாப்பாட்டில் கிடந்த அரணை: அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்!