சென்னை:இந்து மதக்கடவுள் விநாயகரின் பிறந்த நாளை, விநாயகர் சதுர்த்தியாக இன்று (செப்.18) நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிசாமி :
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முழுமுதற் கடவுளாம், வினை தீர்க்கும் தெய்வமாம், ஸ்ரீவிநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும், மனமகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்ல விநாயகப் பெருமானை வணங்கி எந்த செயலைத் தொடங்கினாலும் அந்தச் செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய மன உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு அந்தக் காரியம் வெற்றியில் முடியும் என்பதை உணர்ந்து விநாயகர் சதுர்த்தியன்று மக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை இல்லத்தில் வைத்து அலங்கரித்து தொடங்கும் காரியங்களில் எல்லாம் வெற்றிபெற வேண்டி பக்திப் பரவசத்துடன் வழிபட்டு மகிழ்வார்கள்.
கேட்கும் வரத்தைக் கொடுக்கும் கடவுளாகக் கருதப்படும் வேழமுகத்து விநாயகப் பெருமானின் திருவருளால், நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெற்று, பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில் உளமார்ந்த ‘விநாயகர் சதுர்த்தி’ வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்”இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை:
மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோலஞ்சை துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா..என்று அவ்வை பிராட்டி உருகி வேண்டிய விநாயகப் பெருமானின் திருவடிகளை வணங்கித்தான் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குகிறோம்.
சுதந்திரப் போராட்டம் எழுச்சி பெறவும், மக்களை ஒன்று திரட்டவும், பாலகங்காதர திலகர் அவர்களால் மராட்டிய மாநிலத்தில் தொடங்கப்பட்ட கணேஷ் சதுர்த்தி திருவிழாக்கள் மிகப் பிரபலமாக மதங்களைக் கடந்த மனிதநேயத்திற்கும், ஒற்றுமைக்கும் சான்றாக இன்றும் விளங்குகிறது. விநாயகர் வழிபாடு இந்திய நாட்டைக் கடந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள அனைத்து நாடுகளிலும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவின் பணத்தாளிலும் விநாயகர் பெருமானின் திருவுருவம் அச்சிடப்பட்டுள்ளது. ஒரு ஆண்டின் திருவிழாக்களின் தொடக்கமாக அமைந்திருக்கும் விநாயகர் சதுர்த்தியான இன்று நாட்டு மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று மனநிறைவோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கணபதி நாதரை தொழுது வணங்கி வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் :
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை பக்தியுடனும், மன மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தும்பிக்கையுடன் கூடிய திருமேனி கொண்ட விநாயகரை வணங்கி அவர் திருவடி சரண் அடைபவர்களுக்கு நல்ல சொல் வளம், பொருள் வளம், மன வளம், உடல் நலம் ஆகிய அனைத்து வளங்களும் உண்டாகும் என்கிறார் ஔவை பிராட்டியார் அவர்கள்.
வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் வேழ முகத்தோனின் அருளால் அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும். அன்பும், அமைதியும் தவழட்டும். நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும். இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும், பொங்கட்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.டி.வி. தினகரன் :
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் அனைவராலும் போற்றப்படும் முழுமுதற் கடவுளான விநாயக பெருமான் அவதரித்த தினமான விநாயக சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்த ஒரு நல்ல காரியங்களைத் தொடங்குவதற்கு முன்பாகவும் விநாயக பெருமானை வணங்கி தொடங்கினால், எவ்வித தடங்களுமின்றி நிறைவாக அமையும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். சமுதாயத்தில் அனைத்து விதமான ஏற்றத்தாழ்வுகளையும் களைந்து சமுதாய ஒற்றுமை, மத நல்லிணக்கத்தோடு விநாயகர் பெருமானை வணங்கி விநாயகர் சதூர்த்தியை கொண்டாடி மகிழ்வோம். வருங்காலங்களில் மக்கள் எடுக்கும் நல்ல முயற்சிகள் அனைத்திலும் தடைகள் நீங்கி அவர்களது வாழ்வில் அன்பு, அமைதி, ஆரோக்கியம் செழித்திட விநாயகரின் அருள் துணை நிற்கட்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வழங்கிய இஸ்லாமியர்கள் - கிருஷ்ணகிரியில் நெகிழ்ச்சி !