தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையின் அடையாளமான கானா உருவானது எப்படி? - விளக்குகிறார் கானா முத்து!

The Story Of Chennai Gana:கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், சென்னையோடு ஒன்றிப்போன இந்த கானா பாடல்களுக்கு ஏன் இவ்வளவு மவுசு? என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 9:34 PM IST

Updated : Aug 25, 2023, 9:50 PM IST

சென்னையின் அடையாளமான கானா உருவானது எப்படி?

சென்னை: 'வந்தாரை வாழவைக்கும் சென்னை' என அனைவாராலும் சொல்லும் அளவிற்கு தன்னுடைய தனி அடையாளத்தோடு இன்றும் நிமிர்ந்து நிற்கிறது, 'சென்னை'. சென்னைக்கென பல தனி சிறப்புகள் இருந்தாலும் சென்னையில் திரும்பும் மூலையிலெல்லாம் நண்டு சிண்டுகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் உதடுகளிலும் ஒரு முறையாவது முணுமுணுத்திருப்பார்கள், இந்த 'கானா' பாடலை. அது என்ன கானா? ஆம் இதுவும் சென்னையின் தவிர்க்க முடியாத முக்கியமான ஒரு அடையாளம்தான்.

வலிகளையும் வேதனைகளையும் மறக்கடிக்கும் 'கானா':மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னை என பரந்து விரிந்த மிகப்பெரிய மாநகரம் இது. இதில், கானாவின் பிறப்பிடமாக பார்க்கபடுவது 'வட சென்னை'. இந்த வடசென்னை 'கருப்பர் நகரம்' எனவும் அழைக்கப்பட்டுள்ளது. உழைக்கும் மக்களின் கூடாரமாகவும், சென்னை வாழ்மக்களின் வட்டார மொழியில் தங்களுடைய வலிகளையும் வேதனைகளையும் எதுகை மோனை வார்த்தைகளில் எடுத்துச்சொல்லும் சிறப்பம்சம் கொண்டது இந்த கானா பாடல்கள்.

ராப், ஜாஸ், டிஸ்கோ, மெலோடி என எந்த பாட்டுக்கும் ஆடாத நம் கால்கள், இந்த கானா பாடலுக்கு மட்டும் தானாக ஆடும். அப்படி ஒரு வலிமை உண்டு, இந்த கானா பாடலுக்கு. முன்பு மக்களின் பொழுதுபோக்கிற்காக மக்களிடையே மட்டும் பாடப்பட்ட இந்த பாடல்கள் நாளடைவில் வளர்ச்சிப் பெற்று திரையிலும் வரத்தொடங்கியது. பல நூற்றாண்டுக்கு முன்னரே உழைக்கும் மக்களின் பாடலாக கானா பாடல் பாடபட்டு வந்தாலும் 'மெட்ராஸ் பாடல்' என்றுதான் மக்களால் அழைக்கபட்டது.

சென்னை பேருந்துகளில் 'கானா' ஒலிக்காத நாளே இல்லை: நாளடைவில் மும்பை வாழ்மக்கள் சென்னைக்கு வணிக பயன்பாட்டிற்கு வந்து செல்லும்போது, அவர்களால் செல்லப் பெயர் வைத்து அழைக்கப்பட்டதுதான், இந்த "சென்னை கானா". பின்பு மெல்ல மெல்ல மெட்ராஸ் பாடலாக இருந்தது; சென்னை கானாவாக மாறியது. இந்த கானா பாடல்கள் 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு கல்லூரி மாணவர்களிடையே சென்னை மாநகர் பேருந்துகளில் ஒலிக்காத நாளே இல்லை என்று கூறலாம். பேருந்தில் ஏறியது முதல் கல்லூரியில் இறங்கும் வரை பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி இசைக்க உபகரணங்கள் இல்லாமல் பேருந்தின் உள்நின்று மேற்கூரையை தட்டி கொண்டும், தங்களுடைய கைகளை தட்டிக் கொண்டும் பாடி செல்வார்கள் மாணவர்கள்.

கூலித் தொழிலுக்கு செல்வோர் முதல் அலுவலகம் செல்வோர் வரை அனைவரும் பேருந்து பயணத்தை ரசிக்கும் படியாக அமையும் இந்த கானா பாடல். இவைகளை எதிர்த்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இந்த பாடல்களை ரசித்தவர்கள் பலரும் இருக்கிறார்கள். ஏனென்றால், இந்த பாடல்களில் ஆபாச வார்த்தைகள் அற்றவைகளாக இருக்கும். கானா பாடல்கள் இசைக்க முறையான உபகரணங்கள் ஏதும் பயன்படுத்தப்படுவதில்லை. முன்பெல்லாம் ஒருவர் பாட, சுற்றி நிற்பவர்கள் கைகளை தட்டியும் ஆரவாரம் எழுப்பியும், கையில் கிடைத்த ஏதோ ஒருபொருளை வைத்து கொண்டும் தாளங்களை தட்டிதான் பாடப்பட்டது. இப்போது "டோலக்" என்ற இசை வாத்தியம் பயன்படுத்தபடுகிறது.

எங்கும் நிறைந்த கானா பாடல்:இந்த கானா பாடல்கள் ஆரம்ப காலகட்டத்தில் துக்க வீடுகளில் மட்டும்தான் பாடப்பட்டது. அவைகளை 'இரங்கல் கானா' என சொல்லபடுகிறது. இறந்தவர் செய்த நல்ல காரியங்களையும், வாழ்ந்த காலத்தை நினைவுப்படுத்தும் விதமாக அந்த பாடல் அமையப்பெறும். ஆனால், மெல்ல மெல்ல இந்த பாடல்கள் அழகியலை வர்ணித்து பாடவும், விசேஷ வீடுகளில் பாடவும், பெண்கள் ரசிக்கும்படி வர்ணித்து பாடும் பாடல், பண்டிகை நாட்கள் மற்றும் விழா நாட்களில் பாடுவது என பல வடிவங்களில் வளர்ச்சியடைந்து இப்போது 'கானா பாடல் இல்லாத இடமே இல்லை' என சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

கானா பாடலால் திரைத்துரையில் வாய்ப்பு:இந்த கானா பாடல் குறித்து விளக்குறார், கானா பாடகர் முத்து, “என்னுடைய ஆரம்ப காலத்தில் என்னுடைய தந்தை மற்றும் உறவினர்களை பார்த்து இரங்கல் கானா பாட தொடங்கினேன். நண்பர்கள் அனைவரும் இரங்கல் கானாவால் என்ன கிடைத்துவிட போகிறது? என கிண்டலடித்தனர். அவர்களையெல்லாம் வாயடைக்க வைத்தது இந்த கானாதான். சென்ற இடமெல்லாம் தோல்வியாக இருந்தாலும் படிப்படியாக முன்னேறி, இப்போது திரைத்துரையில் கால் பதித்து பல முன்னணி இசையமைப்பாளர்களுக்கு பாடலைப் பாடி வருகிறேன்.

வியாசர்பாடி to ஆஸ்திரேலியா; நாடுவிட்டு நாடு ஒலித்த கானா:அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவரையும் மிக எளிமையாக சந்தோஷப்படுத்தி விடுவது கானா பாடல் தான். கானா வெறும் சந்தோஷத்திற்காக மட்டும் பாடப்படுவதில்லை. கரோனா காலகட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நாங்கள் பாடியிருக்கிறோம். இளைஞர்களை ஊக்கப்படுத்தவும் நாங்கள் பாடியிருக்கிறோம். கானா எங்கள் வாழ்வியலோடு கலந்த ஒரு அங்கமாகதான் இருக்கிறது. கானா எனக்கு என்ன செய்ததது? என கேட்டால் ‘வியாசார்பாடியில் இருந்த என்னை ஆஸ்திரேலியா’ வரை கொண்டு சென்று சேர்த்திருக்கிறது.

திரைத்துறைக்கு செல்லவும் கைக்கொடுக்கும் இந்த 'கானா':என்னைப்போல, இங்கு பலர் கானா பாடல்களை பாடி வருகின்றனர். அவர்களையும் என்னைப்போல, திரைத்துறையில் அழைத்துச் செல்வதுதான் என்னுடைய நோக்கம். சினிமா துறையில் பெரிய இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா போன்ற இசையமைப்பாளர்களுக்கும் நான் பாட வேண்டும் என எனக்கு ஆசையுள்ளது.

வடசென்னையில் வலம்வரும் கலைஞர்கள் ஏராளம்:எவ்வளவுதான் உயர வளர்ந்தாலும் என்றைக்குமே நான் ஒரு கானா பாடகர்தான். வடசென்னை வாழ்மக்கள் என்றால் ரவுடிகள் அல்ல எங்களுக்குள்ளும் விளையாட்டு வீரர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என ஏராளமானோர் உள்ளோம் என்பதையும் மக்கள் ஏற்றுகொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

கானா பாடல் குறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில், “எங்களுக்கு 'கானா' என்றாலே ஒரு சந்தோஷம்தான். காலையில் கல்லூரி செல்ல பேருந்து ஏறினால் போதும்; நண்பர்கள் அனைவரும் ஒன்றினைந்து ஏதாவது ஒரு பாடலை பாடிக்கொண்டும் தாளம் தட்டிக்கொண்டும், யாரும் முகம் சுழிக்காமலும் நடந்து கொள்வோம். பேருந்தில் அதிகம் யார் இருக்கிறார்கள் என்பதை முதலில் பார்ப்போம்.

பின்னர் வயதானவர்கள் என்றால் அவர்களுக்கு ஏற்றார்போல் ஒரு பாடல், கல்லூரி மாணவர்கள் இருந்தால் அவர்களை குதுகலப்படுத்துவது போன்ற ஒரு பாடல், பெண்கள் அதிகம் இருந்தால் அவர்களை வர்ணிப்பது போன்ற ஒரு பாடல் இப்படி கொண்டாடத்திற்கும் கானாதான். ஒருவரை ஜாலியாக கலாய்க்கவும் இந்த கானாதான்” என்கிறார்கள்.

இதையும் படிங்க:எருமை மாட்டுக்கு போஸ்டர்.. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கண்டிக்க நூதன கவன ஈர்ப்பு!

Last Updated : Aug 25, 2023, 9:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details