சென்னை:சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு வெள்ளையங்கி அணிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
எம்பிபிஎஸ் படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி இனிப்பு, ரோஜாப்பூ மற்றும் வெள்ளையங்கி வழங்கினார் . மேலும், மாணவர்கள் கல்லூரியில் ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும், ராகிங் செய்வதை தடுப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் குறித்த கையேட்டையும் வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, ”எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்களுக்கான 2 சுற்றுக் கலந்தாய்வு முடிந்துள்ளது. மாணவர்கள் 4ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பி உள்ளது. 3ஆம் சுற்றுக் கலந்தாய்வு செப்டம்பர் 5ஆம் தேதிக்கு பின்னர் அகில இந்திய கலந்தாய்வின் அடிப்படையில் நடத்தப்படும்.
முதலாம் ஆண்டு மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு வெள்ளையங்கி அணிவிக்கும் விழா நடைபெற்றது. பின்னர் மருத்துவ நிர்வாகம் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு மருத்துவத் துறையில் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.
சென்னை மருத்துவ கல்லூரி மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இன்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணியும் விழா நடைபெற்ற வருகிறது. கல்லூரிகளில் ராகிங் நடக்காது. அதை மீறியும் நடந்தால், மாணவர்களை நிர்வாகம் நிச்சயம் இடைநீக்கம் செய்யும். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், குறிப்பாக தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆசிரியரை நியமித்து சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.