சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் உயர் கல்வித்துறை செயலாளர் கே.சஞ்சய் மூர்த்தி தலைமையில் ஜி20 முதலாவது கல்விப் பணிக்குழுக் கூட்டத்தின் 2வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. அதனை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், உலக அளவில் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கியுள்ள கல்வித்துறை சார்ந்த பிரச்னைகளுக்கு நீண்ட கால, நிலையான வகையில் தீர்வு காண வேண்டும் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும். 30 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் விருந்தினர் நாடுகளின் பிரதிநிதிகள் என மொத்தம் 80 பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். சர்வதேச கல்வி அமைப்புகள் பற்றியும், அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, சமத்துவமான கல்வி, தரமானக் கல்வியை வழங்குவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும்.
பிப்ரவரி 1ஆம் தேதி கூட்டத்தில் கலந்து கொள்ள வரவிருக்கும் பிரதிநிதிகளை சென்னைக்கு அருகே உள்ள மகாபலிபுரத்தின் யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய புராதன இடத்திற்கு சுற்றுலா அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வளமான, கட்டடக்கலைப் பாரம்பரியம் மற்றும் உயர்தர கைவினையைப் பிரதிபலிக்கும் யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய மகாபலிபுரம் புராதனச் சின்னங்களை இந்த நிகழ்வில் பங்கேற்கும் பிரதிநிதிகள் பார்வையிடுவார்கள்.