சென்னை: ஈரோடு கிழக்கு பேரவை தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் கோரிக்கைவைத்துள்ளார்.
வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடக்க உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் இன்று (ஜன.22) நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த நேர்காணலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத், காங்கிரஸின் ஈரோடு மாவட்டத் தலைவர் மக்கள் ஜி.ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.ராஜன்,' ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட மிகவும் விருப்பமாக உள்ளேன். 1993 முதல் மாணவர் காங்கிரஸில் ஆரம்பித்து, இக்கட்சியில் தொடர்ந்து பயணித்து வருகிறேன். கட்டாயமாக எனக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும். தமக்கு கட்டாயம் வேண்டும் என்று கேட்க எனக்கு உரிமையும் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சிக்காக தான் நிறைய இழந்துள்ளதாகவும், கட்சிக்காக நிறைய பாடுபட்டுள்ளதாகவும், தனக்கு அம்மா அப்பா இல்லை; மாறாக காங்கிரஸுக்காக தன்னை அர்ப்பணித்து உள்ளதாகவும் கண் கலங்கினார். இதனிடையே, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அவர்களிடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும், உழைத்தவர்களுக்கு கண்டிப்பாக சீட்டு வழங்க வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம் எனவும் கூறினார். எனவே, தனது விருப்பத்தின் பேரில் தாமே இங்கு நிற்க வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
சஞ்சய் சம்பத் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய மக்கள் ஜி.ராஜன், 'காங்கிரஸ் பேரியக்கம், ஜனநாயக கட்சி. யார் வேண்டுமானாலும் சீட்டு கேட்கலாம். ஆனால், உழைத்தவர்களுக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும்’ என்றார். தலைமையின் முடிவிற்குப் பிறகு தனது நிலைப்பாட்டை விரைவில் தெரிவிப்பதாகவும், தனது கோரிக்கைக்கு காங்கிரஸ் தலைமை செவி சாய்க்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் போட்டியிட்டால் நோட்டாவுக்கும் கீழ் வாக்கு வாங்குவார் - ஜெயக்குமார்