சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜு, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் கல்லூரி அமைக்க அரசு முன் வருமா எனக்கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”கோவில்பட்டியிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் விருதுநகர் மாவட்டத்தில் 100 இருக்கைகளுடன் 1 அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் 1 அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
அனைத்து மாவட்டத்திலும் செவிலியர் பயிற்சிப்பள்ளி அல்லது செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்கப்படும் என முதலமைச்சர் முன்னதாகவே அறிவித்திருந்தார். தூத்துக்குடியில் 1 அரசு செவிலியர் பள்ளி செயல்பட்டு வருகிறது. எனினும், கோவில்பட்டியில் அரசு செவிலியர் கல்லூரி குறித்து உறுப்பினர் கேட்டுள்ளார். அதற்கான நிலம் மாற்றும் பணிகள் 2020ஆம் ஆண்டே தொடங்கியுள்ளனர். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாகப் பணிகள் நடைபெறவில்லை. இது முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. நிச்சயம் நடவடிக்கைகள் எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
’நாங்கள் நிச்சயதார்த்தம் செய்துவிட்டோம்...!’:இதற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜூ, ”மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி பகுதி வளர்ந்து வருகிறது. அந்தப் பகுதியில் செவிலியர் பயிற்சிப்பள்ளி வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. பல்வேறு பணிகளும் அங்கு நடந்தன. ஆனால், தேர்தல் வந்து அது நிலுவையிலுள்ளது. விரைவில் அந்தப் பணிகளை முடித்துத் தர வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தார்.
இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”சுகாதாரத்துறைக்கு அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க நில மாற்றம் செய்தது 2020ஆம் ஆண்டு தான். அதன் பிறகு எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. இருப்பினும் கல்லூரி அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.