சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் மறைந்த கலைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்பப்பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 15 வாரிசுதாரர்களுக்கு ரூ.25,000 உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
இயல், இசை, நாடக மன்றம்:
தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளைப் போற்றி பேணிப்பாதுகாத்து வளர்ப்பதற்கு, தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் 1955ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்டது.
இச்சங்கமானது இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ்க் கலைகளை அங்கீகரிக்கும் வகையில் 1973ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இம்மன்றத்தின் வாயிலாக மாநிலங்களுக்கிடையே கலைக்குழுக்களை பரிமாற்றம் செய்தல், மாநில அளவில் கலைமாமணி விருது வழங்கும் திட்டம், தொழில்முறை நாடகக் குழுக்கள் மற்றும் நாட்டிய நாடகக்குழுக்களுக்கு நிதியுதவி அளித்தல், பல்வேறு கலை விழாக்களை நடத்துதல், தொன்மை வாய்ந்த அரிய கலை வடிவங்களை ஆவணமாக்குதல், நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்குதல், மறைந்த புகழ்பெற்ற கலைஞர்களின் குடும்பங்களுக்கு குடும்பப்பராமரிப்பு நிதியுதவி வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.