சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிச.28) காலமானார். இன்று அதிகாலை அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேமுதிகவின் எழுச்சி:தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை 2005ஆம் ஆண்டில் விஜயகாந்த் மதுரையில் ஒரு மாநாட்டை நடத்தி தொடங்கினார். அப்போது தமிழகத்தில் இருந்த திமுக, அதிமுக என்ற திராவிட கட்சிகளுக்கு இடைய ஒரு புதிய மாற்றாக தேமுதிக அமைந்திருந்தது. இரண்டு திராவிடக் கட்சிகள் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற இருந்த இடத்தில், திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக வந்திருப்பதாக விஜயகாந்த் அன்று அறிவித்திருந்தார்.
அதன் பின், கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2009 மக்களவைத் தேர்தல்களில் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டு தனக்கென்று தொண்டர்களையும் மற்றும் வாக்காளர்களையும் தேமுதிக தக்கவைத்துக் கொண்டிருந்தது. தேமுதிக கட்சி ஆரம்பித்து ஒரே ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, விருத்தாச்சலம் தொகுதியில் அபார வெற்றி பெற்று, விஜயகாந்த் சட்டப்பேரவையில் நுழைந்தார்.
அதுவரை யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டு வந்த தேமுதிக, 2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 தொகுதிகளில் வென்று எதிர்கட்சியாக அமர்ந்தது. மேலும் எதிர்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், தமிழகத்தில் சிறந்த எதிர்கட்சித் தலைவராக, அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதாவிடம் துணிச்சல் உடன் தன்னுடைய கேள்விகளையும், பதில்களையும் பதிவு செய்தார்.
அதிமுகவுடன் கூட்டணி:2009 மக்களவைத் தோ்தலில் அதிமுகவுடன் மதிமுக, இடதுசாரிகள் அணி சேர்ந்திருந்தது. அந்த நேரத்தில் தன்னிச்சையாக போட்டியிட்டு, தேமுதிக தனது முந்தைய வாக்கு வங்கியை 10.11 சதவீதமாக உயர்த்தியது. அப்போது, அதிமுக வாக்கு வங்கி தேமுதிகவால் பாதிக்கப்பட்டிருந்ததை நுட்பமாக அறிந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 2011 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணியை உருவாக்கி மிகப்பெரிய வெற்றியை உருவாக்கினார்.
தேமுதிகவிடம் சென்ற அதிமுகவின் வாக்கு வங்கி, மீண்டும் அதிமுகவை வந்தடைய இந்த கூட்டணி பாலமாக அமைந்தது. இந்த தேர்தல் வெற்றிக்குப் பிறகு, விஜயகாந்துக்கும் எதிர்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது. அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் சம்பவங்களால், 2014 மக்களவைத் தேர்தல், 2016 பேரவைத் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல் என மூன்று தேர்தல்களில் கூட்டணி அரசியலில் ஈடுபட்டதால், தேமுதிவுக்கு கிடத்த தன்னிச்சையான ஓட்டு சதவீதம், சீட்டுக்கட்டை போல் சரியத் தொடங்கியது.
தேமுதிகவின் வீழ்ச்சி:தனித்துப் போட்டியிட்டுக் கொண்டிருந்த தேமுதிக , 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்தது. தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் தேமுதிக 29 இடங்கள் மற்றும் 7.9 சதவீத வாக்குகளையும் பெற்றது. தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்கட்சியாகவும் உருவெடுத்தது. பெரிய கட்சியான திமுகவையும் பின்னுக்குத் தள்ளியது.