சென்னை: மிகவும் பழைமை வாய்ந்த காவல் நிலையமாக கருதப்படும் பூக்கடை காவல் நிலையத்திற்கு “ISO தரச்சான்றிதழ்” வழங்கும் நிகழ்ச்சியானது பூக்கடை காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
1876ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த காவல் நிலையம் ஏறக்குறைய 150 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் நவீன முறையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய சக்தி மூலம் ஒளிரும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு 10 லட்சம் மதிப்பிலான 90 மரச்சாமான்கள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
புகார் அளிக்க வரும் பொதுமக்களின் குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு பொருட்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. 81 முக்கிய ஆவணங்கள் இங்கு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. பூக்கடை காவல் நிலையம் முழுவதும் சிவப்பு வண்ணத்திற்கு பதிலாக வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்னை பூக்கடை காவல் நிலையத்திற்கு “ISO தரச்சான்றிதழ்” வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல் நிலையத்தின் சுகாதாரம், பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தின் அடிப்படையில் சென்னை பூக்கடை காவல் நிலையம் இந்திய அளவில் 10ஆவது இடத்தையும், தமிழ்நாட்டு அளவில் 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. சென்னை பூக்கடை காவல் நிலையம் மற்ற காவல் நிலையத்துக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது என்றார்.