ஒற்றை தலைமை பிரச்சனை:ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்துவிட்டு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி, ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சியை நிர்வகித்து வந்தனர். இரட்டை தலைமையின் செயல்பாடுகள் கட்சியின் வளர்ச்சிக்கு வழிவகுக்கவில்லை என அதிமுகவினர் பேசத் தொடங்கினர். அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என்றும் வலியுறுத்த ஆரம்பித்தனர்.
ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரில் யார் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போகிறார்கள்? என்ற விவாதம் கிளம்பியது. இது அதிமுகவை ஈபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என இரு அணிகளாக பிரித்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அதிமுகவில் ஒற்றைத் தலைமைப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.
அதிமுக பொதுக்குழு: ஒற்றைத் தலைமை பிரச்சனையில், கட்சியில் இருந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதன் தொடர்ச்சியாக கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றவும், புதிய பதவிகளை உருவாக்கவும் தடை விதிக்கக்கோரி ராம்குமார் ஆதித்யன், சுரேன் பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. பொதுக்குழு கூட்டத்துக்காக ஒருங்கிணைப்பாளரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர வேறு எதற்கும் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்ற கோரப்பட்டிருந்தது.
தமிழ்மகன் உசேன்:பொதுக்குழுவை எதிர்த்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் புதிய தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என்ற நிபந்தனையுடன் பொதுக்குழுவை நடத்த அனுமதி வழங்கியது. அதன்படி ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்றது. அதில் அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டனர்.
இதையடுத்து அதிமுகவில் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஒற்றைத் தலைமை சர்ச்சைக்கு மத்தியில் தமிழ்மகன் உசேன் பொறுப்பேற்றுக் கொண்டது, பேசுபொருளாக மாறியது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:நீதிமன்ற உத்தரவுப்படி 23 தீர்மானங்களையும் நிறைவேற்றாமல், கட்சியின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்மகன் உசேன் நியமனம் செல்லாது, அதனால் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொதுக்குழுவை கூட்ட தடை விதிக்க முடியாது என தெரிவித்தது.
ஓபிஎஸ் சட்டப் போராட்டம்:ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகிய நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், திடீரென ஒற்றைத் தலைமை வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்து, ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என அறிவித்தது.
பொதுக்குழு செல்லாது என அறிவிக்கப்பட்டதால், அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதும் ரத்து செய்யப்பட்டது. கட்சியின் அனைத்து முடிவுகளையும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொதுக்குழு செல்லும்:பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதி அமர்வில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பன்னீர் செல்வத்தின் வழக்கை தள்ளுபடி செய்து, எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்ந்து இயங்க அனுமதி அளித்தது.
எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி:பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும், எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம், ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.
அதிமுகவை கைப்பற்றிய ஈபிஎஸ்:தமிழ்நாட்டில் அதிமுகவை உயிர்ப்புடன் வைத்திருக்க ஒற்றைத் தலைமைதான் தேவை என்ற அதிமுக தொண்டர்களின் விருப்பம் தற்போது நிறைவேறியுள்ளது. அதிமுக நிர்வாகிகளின் ஆதரவுடன் ஒற்றைத் தலைமைக்காக சட்டப்போராட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி தற்போது வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற மிகப்பெரிய ஆளுமைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அதிமுக என்ற கோட்டையை எடப்பாடி பழனிசாமி தன்வசப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி வசமான அதிமுக.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி