தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைத்தறி மற்றும் துணி நூல் துறையில் 22 புதிய அறிவிப்புகள் - முழு விவரம்! - Minister Gandhi latest news

2023 - 2024ஆம் ஆண்டில் சர்வதேச தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு சுமார் 60 லட்சம் ரூபாய் செலவில் சென்னையில் நடத்தப்படும் என்பது உள்பட 22 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டுள்ளார்.

கைத்தறி மற்றும் துணி நூல் துறையில் 22 புதிய அறிவிப்புகள் - முழு விவரம்!
கைத்தறி மற்றும் துணி நூல் துறையில் 22 புதிய அறிவிப்புகள் - முழு விவரம்!

By

Published : Apr 11, 2023, 5:30 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று (ஏப்ரல் 11) கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கைத்தறித் துறை சார்பில் 17 புதிய அறிவிப்புகள் மற்றும் துணி நூல் துறை சார்பில் 5 புதிய அறிவிப்புகள் என மொத்தமாக 22 புதிய அறிவிப்புகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டார். இவற்றில் துணி நூல் துறை சார்பில் வெளியிடப்பட்ட 5 அறிவிப்புகள்,

  1. அனைத்து ஜவுளிப் பிரிவுகளையும் ஒருங்கிணைத்த மாபெரும் ஜவுளி நகரம் ஒன்று, பொது தனியார் கூட்டான்மையின் அடிப்படையில் சென்னையில் அமைக்கப்படும்.
  2. தமிழ்நாட்டில் செயல்படும் அண்ணா கூட்டுறவு நூற்பாலை - ஆண்டிபட்டி மற்றும் பாரதி கூட்டுறவு நூற்பாலை - எட்டயபுரம் ஆகிய இரண்டு நூற்பாலைகளில் ஒவ்வொன்றும் 0.999 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும். இதில் ஒரு ஆலைக்கு 6 கோடி வீதம், இரண்டு கூட்டுறவு நூற்பாலைகளுக்கு மொத்தம் 12 கோடி மதிப்பில் நிறுவப்படும்.
  3. இந்த ஆண்டும் (2023 - 2024) சர்வதேச தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு, சுமார் 60 லட்சம் ரூபாய் செலவில் சென்னையில் நடத்தப்படும்.
  4. இந்தியாவில் உள்ள 12 தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி சிறப்பு மையங்களால் கண்டறியப்பட்டுள்ள தொழில்நுட்பங்களை பகிர்வதற்கும், தமிழ்நாட்டில் தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான கலந்தாய்வு மேற்கொள்ளவும், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தொழில் முனைவோருடன் இரண்டு நாள் பயிலரங்கம் சுமார் 27 லட்சம் ரூபாய் செலவில், ஜவுளி தொழில் முனைவோர் அமைப்புகளின் ஆதரவுடன் கோயம்புத்தூரில் நடத்தப்படும்.
  5. தமிழ்நாட்டில் ஜவுளி தொழில் தொடங்க ஆர்வம் உள்ள தொழில் முனைவோர்களுக்கு, தொழில்நுட்பம் மற்றும் முதலீடு தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் உதவிகள் வழங்கிட, துணி நூல் துறை கட்டுப்பாட்டின் கீழ் பிரத்யேக ஜவுளி தொழில் ஊக்குவிப்பு பிரிவு அமைக்கப்படும்.

மேலும் கைத்தறி துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள 17 அறிவிப்புகள்,

  1. டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு கைத்தறி பட்டு பூங்கா ஆரணியில் அமைக்கப்படும்.
  2. இளைஞர்களுக்கான நெசவுப் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் 1.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
  3. கூட்டுறவு சங்கங்களில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை கூலியில், 10 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும்.
  4. சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் கைத்தறி நெசவாளர்கள் சந்தா செலுத்தப்பட வேண்டிய கால அளவினை 25 ஆண்டுகளில் இருந்து, 20 ஆண்டுகளாக குறைக்கப்படும்.
  5. கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள் இயற்கை எய்தும்போது வழங்கப்படும் ஈமச்சடங்கு உதவித்தொகை, 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  6. கைத்தறி நெசவாளர்கள் மிகுதியாக உள்ள பகுதிகளில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையுடன் இணைந்து நெசவாளர்களுக்கு என சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும்.
  7. கைத்தறி நெசவாளர்களுக்கு 263.90 லட்சம் ரூபாய் மதிப்பில் 3,006 தறிகள் உபகரணங்கள் வழங்குதல் மற்றும் 56 நெசவாளர்களுக்கு 67.20 லட்சம் ரூபாய் மதிப்பில் தறிக் கூடங்கள் அமைத்துத் தரப்படும்.
  8. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, கதர் மற்றும் கைத்தறி ரகங்களில் பாரம்பரிய மற்றும் கலைநயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கைத்தறி ரகங்கள் பிரபலப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  9. மாநிலத்தில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலை மேம்படுத்தும் வகையில், விரிவான சந்தை ஆய்வு மேற்கொள்ளப்படும்.
  10. கைத்தறி நெசவுக்கு பயன்படுத்தப்படும் சிட்டா நூல் சாயம் இடும் முறைக்குப் பதிலாக, நவீன முறையில் சாயம் இடும் சாத்தியக் கூறுகள் குறித்து தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம் மூலம் 10 லட்சம் ரூபாய் செலவில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
  11. தமிழ்நாட்டின் கைத்தறி தயாரிப்புகளுக்கான பொது வணிகச் சின்னம் மற்றும் தொகுப்பாக்கள் தேசிய வடிவமைப்பு நிறுவனம் அகமதாபாத் மூலம் 35.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
  12. தோடர் பழங்குடியின மக்களின் நலனுக்காக முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் தோடா எம்பிராய்டரி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் தொடங்கப்படும். தோடர் எம்ப்ராய்டரி தயாரிப்புகள், கோ அப்டேட்ஸ் லும்ஒர்ல்டு மற்றும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் விற்பனை நிலையங்கள் மூலம் சந்தைப்படுத்தப்படும். இதற்கான ஆரம்ப கட்டப் பணிகளுக்கு என 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  13. கைத்தறி ரகங்களை காட்சிப்படுத்தவும் மற்றும் சந்தைப்படுத்தவும் ஏதுவாக நான்கு மெட்ரோ நகரங்களில் வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நடத்தப்படும். இதன்படி சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகிய நான்கு மெட்ரோ நகரங்களில் 50 லட்சம் ரூபாய் செலவில் 2023 - 2024ஆம் ஆண்டில் வாங்குவோர் - விற்போர் சந்தை நடத்தப்படும்.
  14. திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில், 35 லட்சம் ரூபாய் செலவில் நீராவி கொடிகலன் மற்றும் தொட்டி சாயமிடும் இயந்திரம் நிறுவப்படும்.
  15. கரூர் சாயச்சாலையில் 20.40 லட்சம் ரூபாய் மதிப்பில் சீஸ் வடிவ நூல் சாயம் விடும் இயந்திரம் நிறுவப்படும்.
  16. வாடிக்கையாளர்களின் கைத்தறி உபபொருட்களின் தேவையினைப் பூர்த்தி செய்வதற்கு, உபபொருட்கள் விற்பனையகம் கோ ஆப்டெக்ஸ் மூலம் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் அமைக்கப்படும்.
  17. கோ ஆப் டெக்ஸ் மற்றும் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் விற்பனை நிலையங்களில் 17.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 மேசைத் தறிகள் நிறுவப்படும்.

இதையும் படிங்க:சட்டத்துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ரகுபதி; முழு விவரம்!

ABOUT THE AUTHOR

...view details