சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்று, முதல் தைப்பொங்கல் திருநாளில் 21 தொகுப்பு கொண்ட பொங்கல் பரிசை அரசு வழங்கியது. ஒருபுறம் பொங்கல் தொகுப்பு வழங்கியதில் மக்களிடையே வரவேற்பு இருந்தாலும், மறுபுறம் தரமற்ற பொருட்களை பெற்றதாக விமர்சனங்களும் எழுந்தன. அதனால் முதலமைச்சர் ஸ்டாலின், பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு டெண்டர் விடப்பட்ட நிறுவனத்தை கருப்பு பட்டியில் சேர்ப்பதற்கு அதிரடியாக உத்தரவிட்டார்.
விவசாயிகளிடம் கரும்பு ஒன்றிற்கு ரூ.13 கொள்முதல் செய்து, அதனை 33 ரூபாய்க்கு டெண்டர் கொடுத்ததிலும், மற்ற பொருட்களில் 150 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். இவ்வாறு பொங்கல் தொகுப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அதன்பின் பிப்ரவரியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 70 சதவீதத்துக்கு மேற்பட்ட இடங்களை திமுக கைப்பற்றியது.
அரேபிய பயணத்தில் குடும்ப சர்ச்சை: முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் துபாய் எக்ஸ்போ-வில் பங்கேற்கவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களைச் சந்திக்கவும் 5 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் சென்றார். ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டார்களைச் சந்தித்துப் பேசிய ஸ்டாலின், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
இந்த பயணத்தின் மூலம் 6 முக்கிய நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் 14,700 பேருக்கு வேலை கிடைக்க இருக்கிறது என்றும், பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும் எனவும் கூறப்பட்டது. ஆனால் முதலமைச்சரின் துபாய் பயணத்தில் எதிர்ககட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தன.
அதிலும் குறிப்பாக அரசு முறை பயணத்தில் முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் சென்றிருந்தது பெரிதும் பேசப்பட்டது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "முதலமைச்சர் குடும்பம் துபாய்க்கு 5,000 கோடி ரூபாய் கொண்டு சென்றுள்ளது. அந்த பணத்தை வைத்து முதலமைச்சரின் உறவினர்கள் பெயரில் லூலு மால் அமைக்க திட்டமிடப்பட்டதாக குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
நீக்கப்படாத நீட் ரத்து: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பது திமுகவின் முக்கியமான தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. அதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியது. ஆனால், அதற்கான நடவடிக்கை என்பது மந்தமாக உள்ளது. ஏனென்றால் உச்ச நீதிமன்றமே நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வழக்கில் தேர்வுக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருந்தது.
இந்த நிலையில், "நீட் நுழைவுத்தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும்" என முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இருப்பினும், தற்போது வரை நீட் தேர்வு விலக்கு அளிக்கப்படவில்லை.
சிங்காரச் சென்னை 2.0: பருவமழை காலங்களில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள "சிங்காரச் சென்னை 2.0 திட்டம்" உலக வங்கி நிதி மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து திட்டப் பணிகளை உடனடியாக தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்தத் திட்டத்தின் மூலம் மாண்டஸ் புயலை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டது.
ஆன்லைன் பதிவு கட்டாயம்: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றியது முக்கியமான ஒன்று. இதுதவிர, 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனுடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் 58 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டது என இந்தத் துறையில் பல முக்கியத்துவங்கள் இருக்கின்றன. குறிப்பாக, துறை சார்ந்த செயல்பாடுகள் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடும் உத்தரவால் பெரிதும் பாராட்டப்படுகிறது.
இலங்கைக்கு உதவிக்கரம்: பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர், ரூ.80 கோடி மதிப்பிலான 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான 137 டன் மருந்து பொருட்கள் கப்பல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.
வருவாய் பற்றாக்குறை திட்டம்: வருவாய் பற்றாக்குறையைக் குறைக்கவும் திட்டங்களை வகுத்துள்ளது தமிழ்நாடு அரசு. 2022 - 2023ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.23,313 கோடியாக் குறைக்கவும், 2024 - 2025ஆம் ஆண்டில் ரூ.13,582 கோடியாகக் குறைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
வருவாய் பற்றாக்குறையை குறைப்பதன் மூலம் தமிழ்நாட்டின் நிதிநிலைமையும், கடன் தாங்கு தன்மையும் வலுப்பெறும். பெரும்பாலும் வளர்ச்சிக்கான செலவினங்கள், நீண்டகாலத் திட்டங்ளுக்கு நிதியை அதிகமாக ஒதுக்கீடு செய்வதால் அதற்குரிய பலன்களும் நீண்ட காலத்தில் கிடைக்கத் தொடங்கும்.
விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு: கடந்த 20 வருடங்களாக விவசாய மின் இணைப்புக்காக பதிவு செய்யப்பட்ட ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த திட்டம் விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
இதனால் கடந்த சட்டப்பேரவையில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது, 34,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 16,000 விவசாயிகளுக்கு தைப்பொங்கலுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.